இல்லற வாழ்வில் பிரச்சனையா? அப்படியென்றால் இதை படிங்க...

 
Published : May 21, 2018, 05:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
இல்லற வாழ்வில் பிரச்சனையா? அப்படியென்றால் இதை படிங்க...

சுருக்கம்

Problem in family life

கணவன் மனைவிக்குள் பிரச்சனை அதிகரித்து பிரியக்  காரணம் மனம் விட்டு பேசாமலிருப்பது தான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். இங்கு இல்லற வாழ்வில் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.

அலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல்-மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.

ஏதோ காரணத்தால் பிரச்சனை பெரிதாகும் தருணத்தில் யாராவது ஒருவர் மவுனம் காத்தால் பிரச்சனை விரைவில் முடியும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.

கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான்’ என்று மனைவி, வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினைகளை பெரிதாக்கும்.

இருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. ‘அவர்/அவள் இறங்கி வரட்டும்’, ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்?’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.

துணைவரிடம் மரியாதை காட்டுங்கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரம் குறைவாக பேசக்கூடாது. இது என் வேலை இல்லை என்று பிரித்துக் கொள்ளாமல், உங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கும் துணைவருக்கு அவ்வப்போது பாராட்டுகளும், நன்றியும் கூறுங்கள்.

தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது. மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங்கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

இதுதான் பின்னர் தம்பதிக்குள் சண்டை ஏற்படும்போது, ‘அவர் அப்படி, இவர் இப்படி’ என்று குடும்பத்தினரை வசைபாட காரணமாகிறது. அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை வஞ்சகத்தை வளர்த்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண்-பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை தவிருங்கள்.

மனைவி கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்தியம் தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும்.

உங்கள் தேவையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை சுட்டிக்காட்டி ஒப்பிட்டு பார்த்து உங்கள் வாழ்க்கையை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு அமைந்த வாழ்க்கையைப் பற்றி பேசி ‘நம் வாழ்வு அப்படி இல்லையே’ என்று ஏங்குவது குடும்பத்திற்குள் பிரச்சினையை வளர்க்கும். வாழ்க்கை கனவுகளை நிறைவேற்ற தம்பதியர் இருவரும் இணைந்து போராடுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்