விடுமுறை என்றால் கூட குழந்தைகள் 'பிளே ஸ்டேஷனில்' சென்று விளையாட ஆரம்பித்து விடுகின்றன. பெருநகரங்களின் மால்களில் குழந்தைகள் காத்திருந்து விளையாடுகின்றனர்.
குழந்தைகளின் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்..! உங்கள் குழந்தை இப்படி விளையாடியது உண்டா...?
குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். ஆனால் குழந்தைகள் தற்போது விளையாட்டுக்களையே மறந்து விட்டனர். ஏனெனில் அவர்களுக்கு செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடுவதற்கே நேரம் இல்லை.
விடுமுறை என்றால் கூட குழந்தைகள் 'பிளே ஸ்டேஷனில்' சென்று விளையாட ஆரம்பித்து விடுகின்றன. பெருநகரங்களின் மால்களில் குழந்தைகள் காத்திருந்து விளையாடுகின்றனர். இதனை பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுகிறோம் என்பதை பெற்றோர் மறந்துவிடுகின்றனர். இன்று குழந்தைகள் குழந்தைகளாக இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.
கண்ணா மூச்சி ரே ரே…..கண்டுபிடி யாரு…..
குழந்தைகள் அதிகம் பிடித்த விளையாட்டு கண்ணா மூச்சி . மறைந்திருப்பவர்களை கண்ணை கட்டிக்கொண்டு பிடிப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம். அன்று நாம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களாகிய பம்பரம், கிட்டிப்புள், பச்சைக்குதிரை, கபடி, கோலிக்குண்டு, செதுக்கு முத்து, திருடன் போலீஸ், கிளித்தட்டு, காற்றாடு, பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் எங்கே போயின?
பெண் குழந்தைகள் குதுாகலமாக விளையாடிய நொண்டி, தட்டாங்கல், தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பூப்பறித்தல், கரகரவண்டி, ஊஞ்சல் போன்ற விளையாட்டுக்கள் போன இடம் எங்கே? இன்று கிராமங்களில் கூட இவ்விளையாட்டுகளை காணமுடியவில்லை. வெறுமனே மேம்போக்காக நேரத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடப்பட்டவை அல்ல இவை. உடல் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் குழந்தைகளின் சிந்தனைத் திறனையும், சமயோஜிதப் புத்தியையும் வளர்க்கும் விதத்தில் தான் இருந்தன.
நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் கூட இன்று காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புற விளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மறைந்து வரும் விளையாட்டுக்கள்
குழந்தைகள் விளையாட மரத்திலான செப்புச் சாமான்களை வாங்கித் தருவார்கள். மண்ணைத் தண்ணீர் விட்டுக் குழைத்து இட்லி சுட்டு விளையாடுதல், இலை, செடிகளைப் பிடுங்கிக் குழம்பு வைத்தல் உற்சாகமாக நடைபெறும். கல்யாண முருங்கை மரத்து இலைகளைப் பறித்து வைத்து, அதில் மண் இட்லி பரிமாறப்படும். அதை எல்லாக் குழந்தைகளும் சாப்பிடுவது போல நடிக்கும். சில குழந்தைகள் போலியாக ஏப்பம் விடும். ஓரளவு வளர்ந்த குழந்தைகள், வீட்டிலிருந்து அம்மாவுக்குத் தெரியாமல் கருப்பட்டி, அரிசி, பொறிகடலை எடுத்து வந்து விளையாடும். அதைப் பிறருக்குப் பகிர்ந்து தருவதில் பொறாமைப்பட மாட்டார்கள்.
ஒரு மாங்காய் மட்டுமிருந்தால், அதை சட்டைத்துணியினால் மூடி ‘காக்கா’ கடி கடித்து எல்லோருக்கும் தருவார்கள். இப்படி சேர்ந்து அங்கும், இங்கும் ஓடி விளையாடும் போது குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வருகிறது. எதையும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் வருகிறது. அதே போல் குழந்தைகள் ஓடி விளையாடுவதால் தேவையற்ற கொழுப்பு சக்தி குறைகிறது. குழந்தைகளின் விளையாட்டு உலகத்தில், பொறாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் வீட்டுக்குள் கணினி முன் விளையாடுவதால் தான், இன்றைய பிள்ளைகளுக்கு சகிப்பு தன்மை குறைந்து விடுகிறது.
மண்ணில் விளையாடட்டும்
குழந்தைகளை மண்ணில் விளையாடவிடுங்கள், அப்போதுதான் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி கூடும் என அமெரிக்க ஆராய்ச்சி கூறுகிறது.
பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பு ?
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பள்ளிகளில் உடற்பயிற்சி பாட வேளையானது அட்டவணைக் குறிப்பில் மட்டுமே இருக்கிறதே தவிர, அதை மாணவர்களுக்கு செயல்படுத்துவதில் எப்பள்ளியும் முனைப்பு காட்டுவதில்லை.
சிந்தனையை வளர்க்கும் விளையாட்டு
விளையாட்டுக்கள் ஓர் இனத்தின் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன.உடல் வளர்ச்சி சார்ந்து எலும்புகள் மற்றும் தசைகளை விளையாட்டு வலுவடைய செய்கிறது. உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது. விளையாடுவதால் ஐம்புலன்களின் இயக்கம் சிறப்பாக அமைகிறது. உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. இதயம் மற்றும் நுரையீரல் இயக்கம் உறுதிப்படுகிறது. விளையாடுவதால் குழந்தைகளின் கற்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. தன்னம்பிக்கையை விளையாட்டு வளர்க்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு கண்டறிய உதவுகிறது.
வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கிறது. குழந்தைகள் குழுவாக பணிகளைச் செய்ய, கற்றுக் கொடுக்கிறது. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கிறது. ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது. தலைமைப்பண்பை வளர்க்கிறது. தெளிவான சிந்தனையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளிடம் சகோதரத்துவத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்க்கிறது.
விளையாட்டில் பயங்கரவாதம் வேண்டாமே:
மெஷினுடன் விளையாடுவது, தொலைக்காட்சிப் பார்ப்பது, கணினியில் விளையாடுவது, வீடியோ கேமில் நேரம் செலவழிப்பது போன்றவற்றால் குழந்தையிடம் வன்முறை எண்ணங்கள் தூண்டப்படுகின்றன.
சமீபக்காலமாக ப்ளே ஸ்கூல்கள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அங்கும் குழந்தை உட்கார்ந்து தான் விளையாடுகிறது. காலச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று ஞாயிற்றுக் கிழமைகளில் கூட தெருக்களில் விளையாடும் பிள்ளைகளைப் பார்க்க முடியவில்லை. தெருமண்ணில் விளையாடுவது சுகாதாரக்குறைவு என்று குழந்தைகளைப் பலர் வீட்டுக்கு வெளியே விடுவதில்லை. ‘தொலைக்காட்சி’ உடன் இன்று குழந்தைகளின் உலகம் கட்டப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விளையாட்டுகளில் குழந்தைகள் உலகம் விரிந்திருப்பது என்பது வெறும் வரலாற்றுப் பதிவாகி விட்டது. குழந்தைகளிடமிருந்து விளையாட்டைப் பறித்து, இரண்டரை வயதிலே பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அதிகரித்துள்ளனர் என்பது தான் இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரம்.