ஆம்லெட்டுக்கு ஆப்பு வைத்த வெங்காயம்... கண்ணைக் கசக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 27, 2019, 2:47 PM IST
Highlights

ஆம்லெட்களில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ் தூவப்படுகிறது. பல ஓட்டல்களில் வெங்காயம் இல்லாமலேயே பிளைன் ஆம்லெட்கள் மட்டுமே போடுகிறார்கள்.

வெங்காய விலை உச்சம் அடைந்து கண்ணை கசக்க வைக்கிறது. வரலாறு காணாத அளவு உயர்ந்து வரும் வெங்காயம் விலை பொதுமக்களை பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் கண்களில் உரிக்காமலேயே வெங்காயத்தின் விலை கண்ணீரை வரவழைத்து வருகிறது.

பல்லாரி வெங்காயம் விலை உயருகிறதே என்று சாம்பார் வெங்காயத்தை பயன்படுத்திய மக்கள், இப்போது அதன் விலையும் உயர்ந்திருப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் புலம்புகிறார்கள். இதனால் பலரது வீடுகளில் இட்லி-தோசைக்கு சட்னி, சாம்பாருக்கு பதில் இட்லி பொடி பயன்படுத்தப்படுகிறது. வெளிச்சந்தைகளில் பல்லாரி வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை ஆகிறது. சாம்பார் வெங்காயம் விலை ரூ.160-ஐ தாண்டி ‘டாப்’ கியரில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தொடர்மழை காரணமாக விளைச்சல்-வரத்து பாதித்துள்ள நிலையில், விவசாயிகள் கை இருப்பில் உள்ள வெங்காயமே விற்பனைக்காக வந்து கொண்டிருக்கிறது.

ஆம்லெட்களில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ் தூவப்படுகிறது. பல ஓட்டல்களில் வெங்காயம் இல்லாமலேயே பிளைன் ஆம்லெட்கள் மட்டுமே போடுகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் முணுமுணுத்துக்கொண்டு சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. சிக்கன் ரைஸ், எக் ரைஸ் போன்ற துரித உணவுகளிலும் வெங்காயத்துக்கு பதில் முட்டை கோஸ் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

சால்னா புரோட்டாவுக்கே வெங்காயத்தை சைட்-டிஷ் ஆக சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு பழக்கப்பட்டுவிட்ட உணவு பிரியர்கள், தற்போதைய சூழ்நிலையில் பரிதவித்து வருகிறார்கள். ’காசு கொடுத்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் மறுமுறை தயிர் பச்சடி கேட்டால் கடைக்காரர்கள் முறைக்கிறார்கள். இப்படியே போனால் தயிர் பச்சடிக்கு தனியாக காசு வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’என்று வாடிக்கையாளர்கள் புலம்புகிறார்கள்.

இப்படி அனைத்து தரப்பினரையும் வெங்காயம் விலை புலம்ப வைத்துவிட்டது. கடன் கேட்டாலும் கேட்பார்கள் என்பதால் வீட்டில் உள்ள வெங்காயத்தையும் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்து வைத்து பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. இதனை சரிசெய்யவும், வெங்காயம் விலையை குறைக்கவும் உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.

click me!