இனி 8 போடாமலேயே லைசென்ஸ் வாங்கலாம்... ஆனால் இந்த சான்றிதழ் மட்டும் கட்டாயம் இருக்கணும்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 1, 2021, 1:17 PM IST
Highlights

நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 
 

கார், பைக் உள்ளிட்ட எந்த வாகனத்தை ஓட்டுவதற்கும் பயிற்சி மையத்தில் முறையாக பயிற்சி பெற்றிருந்தாலும் ஓட்டுநர் லைசன்ஸ் பெற முதலில் எல்எல்ஆர் பெற்று, பின்னர் ஆர்டிஓ அலுவலர் முன்பாக வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டியது கட்டாயம். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் என்றால் 8 போட்டு காண்பித்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்.

  

இந்த முறையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.  இந்த நடைமுறையின்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறுபவர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி,  அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்க வேண்டும். அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதிகள் இருக்க வேண்டும் என்றும், பயிற்சியாளர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும்,  வாகனங்களை மலை , கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு நில அமைப்புகளில் கற்பிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும். 

இதுபோன்ற தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு சென்சார் பொருத்தப்பட்ட பிரத்யேக பாதையில் வாகனம் ஓட்டும் சோதனை ந டத்தப்பட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் வெற்றி பெறும் ஓட்டுநர்கள் உரிய சான்றிதழுடன் ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே லைசன்ஸ் பெறலாம். லைசன்ஸ் பெற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து கடுமையான வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!