இசையால் மனதிற்கும் உடம்புக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது தெரியுமா?

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 04:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
இசையால் மனதிற்கும் உடம்புக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது தெரியுமா?

சுருக்கம்

Music plays vital role in human life

உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன? தாத்தாவைக் கேட்டால்„பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“பிடிக்கும் என்பார். அம்மாவைக் கேட்டால் கற்பூர பொம்மை ஒன்று என்பார்.

அப்பாவிடம் கேட்டால் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ என்பார். அதுவே ஓர் அண்ணாவிடம் ஒய் திஸ் கொலவெறி என்பான். இந்தியர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இல்லவே இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை என்றால் பிடிக்கிறது? இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்னதான் இருக்கிறது?

இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் எளிமையாக இருக்கும்.

அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல வகையான ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம்.

நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன. உண்மை சொல்லப்போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…? நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருப்போம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக்கொண்டு இருந்திருப்போம்.

அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா? உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் நமது உடலுக்குள் நடைபெறும்போது நமது மூளை மகிழ்ச்சியான உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது. அதற்கான ஹார்மோன்களை உறுப்புகள் சுரக்க ஆரம்பிக்கின்றன.

உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் நமது பசி தீர்ந்துவிட்டு,உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம். ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் நமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது.

இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது. இதேபோன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது.

நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும். அத்துடன் நமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…? நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கிவிடுகின்றன.

இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும்BPM வழியாக அளக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான். 72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம்,அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம். உதாரணத்திற்கு மேலே குறிப்பிட்ட பாடல்களில் 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன.

இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது! சிறுவர்கள் வளர்ச்சியின் போது இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள். அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ)அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள். 

எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல்,மிருதங்கம், கிடார் போன்ற ஏதாவது ஒன்றை கற்று கொள்ள விடுங்கள்! அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன! எந்த வகையான இசைக் கருவிகளை கற்றுக் கொள்வது எளிது என பெற்றோர்கள் கேட்பார்கள் எல்லாக் கருவிகளுமே எளிதுதான் பயிற்சி பெற்றால்.

எதில் குழந்தைகளுக்கு ஆர்வமோ அதை அவர்களுக்கு பயிற்றுவிப்பதே நல்லது. இசையைக் கற்றுக் கொள்ள குறைந்த பட்சம் குழந்தைக்கு ஐந்து வயதாவது ஆகியிருக்க வேண்டும். இசையைக் கற்றுக் கொள்ளும்போது மன அழுத்தம் குறைகிறது. அறிவு மேம்படுகிறது. 

உண்மை சொல்லப்போனால் இசையினால் நாம் பெறும் பயன்களைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்… 

சும்மா„ஒய் திஸ் கொலவெறி“ பாடலை மட்டுமே கேட்டுக் கேட்டு டாவின்சி, பிகாசோ ஆகிடலாம் என்று எல்லாம் நினைத்து விட வேண்டாம் என்கிறார்கள் இசை வல்லுனர்கள். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!