காதலர் தினக் கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் பெறுவது ரோஜா பூக்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக வாங்கிவிட்டு, மீந்துவிட்டதே என்று கவலைப்படுவராக நீங்கள் இருந்தால், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
ரோஜா அன்பின் சின்னம் என்று கூறப்படுகிறது, எனவே காதலர் வாரம் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் சிவப்பு ரோஜாக்களை கொடுக்கும்போது, ஏதோ தங்கள் இருவருக்கு இடையேயான அன்பு உறுதி செய்யப்படுவதாக அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் ரோஜாக்கள் ஓரிரு நாட்களில் வாடிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு தூக்கி எறிய வேண்டும். ஆனால் இப்போது நீங்கள் காதலர் தினத்தன்று பெற்ற ரோஜாக்களை தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் மீந்துபோன ரோஜாக்களை வைத்து வீட்டிலேயே ஆர்கானிக் மற்றும் மிகவும் ஆரோக்கியமான ரோஸ்வாட்டரை தயார் செய்யலாம். அதுதொடர்பான செய்முறை குறித்து தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
- 2-3 கப் புதிய ரோஜா இதழ்களை கழுவி சுத்தம் செய்யவும்.
- ஒரு பெரிய பாத்திரம்
- வடிகட்டி
- தெளிப்பு பாட்டில் அல்லது ஜாடி
- 1/2 கேன் காய்ச்சி வடிகட்டிய நீர்
செய்முறை
- ரோஸ் வாட்டர் தயாரிக்க, முதலில் உங்கள் சுத்தமான ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
- இதழ்களை மறைக்க போதுமான காய்ச்சி வடிகட்டிய நீர் அல்லது சுத்தமான தண்ணீரை சேர்க்கவும். (அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
- இந்த பாத்திரத்தை குறைந்த தீயில் வைத்து ஒரு மூடியால் மூடி வைக்கவும். 30-45 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
- தயாரிக்கப்பட்ட ரோஸ் வாட்டரை முழுமையாக குளிர்விக்க விடவும்.
- ஒரு சல்லடை உதவியுடன் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை மட்டும் ஊற்றி வைத்துவிட வேண்டும். இதை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்
1. முகத்திற்கு டோனராக பயன்படுத்தலாம்.
2. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஸ்ப்ரேவாகக் கூட பயன்படுத்தலாம்,
3. சருமத்தை ஹைட்ரேட் செய்யவும், pH சமநிலையை சரிவர பராமரிக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுகிறது.
4. வீடுகளுக்குள் நறுமணம் கமழ ஸ்ப்ரேவாக பயன்படுத்தலாம்.
5. கூந்தலுக்கு நறுமணம் சேர்க்கும் ஹேர் ஸ்ப்ரேவாகக் கூட ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.
6. ரோஸ் வாட்டரில் காக்டெய்ல் மற்றும் மாக்டெய்ல் தயாரித்தால் கூட மிகவும் அருமையாக இருக்கும்.
7. அவ்வப்போது ரோஸ் வாட்டரை கண்களில் விட்டு கழுவுவது, கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.