
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மேலும் இந்தப் பட்டியலில் தொடர்ந்து 12-வது ஆண்டாக அவர் முதல் இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சொத்து மதிப்பு 410 கோடி டாலர் அதிகரித்து 5,140 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது. அவரது ஜியோ நிறுவனம் 34 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.
போர்ப்ஸ் பட்டியலில் இந்தியப் பெரும் பணக்காரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். கவுதம் அதானி இந்தப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். அவரது சொத்து மதிப்பு 1,570 கோடி டாலராக உள்ளது. அடுத்து இந்துஜா சகோதரர்கள் (1,560 கோடி டாலர்), பலோன்ஜி மிஸ்திரி (1,500 கோடி டாலர்), உதய் கோட்டக் (1,480 கோடி டாலர்) இருக்கின்றனர்.
பங்குச்சந்தைகள் கடும் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு வரும் நிலையிலும் போர்ப்ஸ் பட்டியலில் உள்ள இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு, தனிப்பட்ட முறையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம், ஒட்டுமொத்த அளவில் அவர்களின் சொத்து மதிப்பு 8 சதவீதம் குறைந்து 45,200 கோடி டாலராக இருக்கிறது.
போர்ப்ஸ் பத்திரிகையின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் (2019) சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் இருக்கிறார். அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலீட்டுச் சக்ரவர்த்தி வாரன் பபெட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.