
How to Prevent COVID-19 Infection in Kids : நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரியவர்களைத் தாக்குவது போல இத்தொற்று குழந்தைகளுக்கும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு இத்தொற்றினால் தீவிர பாதிப்பு இல்லை என்றாலும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
இந்த மாதிரியான சூழலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க பெற்றோர் என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
முகக்கவசம்:
பள்ளி செல்லும் குழந்தைகள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது மூக்கு, வாய் பகுதியை மூடும் வகையில் முகக்கவசம் போட்டு அனுப்ப வேண்டும். பொது இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கை கழுவுதல்:
குழந்தைகள் வெளியே சென்று விளையாடும்போது பல பொருள்களை தொடக்கூடும். அதனால் அவர்களுக்கு 20-30 வினாடிகள் வரை கைகளை சோப்பு போட்டு கழுவ சொல்லித் தர வேண்டும். அவர்கள் சரியாக கழுவுகிறார்களா? என கவனிக்க வேண்டும். குறிப்பாக கழிவறை சென்ற பின் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என சொல்லி கொடுங்கள். எப்போதுமே சாப்பிடும் முன்பு கைகளை கழுவ அறிவுறுத்துங்கள். கைகளை கழுவாமல் ஒருபோதும் முகம், கண்கள், வாய் ஆகியவற்றை தொடக்கூடாது என கண்டிப்பாக சொல்லுங்கள்.
உணவு பழக்கம்
குழந்தைகளுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பழக்கம் அவசியம். பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்ற சரிவிகித உணவு கொடுப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி:
குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடவேண்டும். கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி போடத் தகுதியானவர்கள் கண்டிப்பாக போட வேண்டும். குழந்தைகளுக்கு போட வேண்டிய அனைத்து தடுப்பூசிகளும் சரியான நேரத்தில் போட்டுள்ளீர்களா என்பதை கவனியுங்கள்.
சுத்தம்
கொரோனா தொற்று பரவலை தடுக்க சுத்தம் முக்கியம். குழந்தைகள் தொடும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்து வையுங்கள். கதவுகளின் கைப்பிடிகள், விளையாட்டு பொருள்கள், மேஜைகள் ஆகியவை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிவை.
உரையாடல்
குழந்தைகளிடம் கொரோனா நோய் குறித்து பேச வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தொற்றின் தீவிரம் புரியும்போது குழந்தைகளும் கவனமாக இருப்பார்கள்.
அலட்சியம் வேண்டாம்!
குழந்தைகளிடம் சில அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சு திணறல் ஆகிய அறிகுறிகள் வந்தால் மருத்துவரை அணுகுங்கள். பெற்றோர் சுய வைத்தியம் செய்யக் கூடாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.