இளம் வயதில் துடிதுடிக்க வைக்கும் ஹார்ட் அட்டாக்... சில நிமிடங்களில் மரணம்... நமக்கு வந்தால் என்ன செய்வது..?

By Thiraviaraj RMFirst Published Nov 3, 2021, 2:28 PM IST
Highlights

எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

புனித் ராஜ்குமாருக்கு வயது 46தான். 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். ஆனால், அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.

46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இரவு 12 மணி வரையிலும்  பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். 

பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க முடியாதா? என்று போராடி இருக்கிறது மருத்துவமனை. நண்பகல் 12 மணியளவில் கை விரித்து மரண அறிவிப்புச் செய்து இருக்கிறார்கள். எந்த வித முன்னறிவிப்பும் தராமல் 'இனிமேல் துடிக்க மாட்டேன்' என்று இதயம் திடீரென ஸ்ட்ரைக் செய்து ஏனோ நின்று போய் விடுகிறது. மாஸிவ் கார்டியாக் அட்டாக். இதற்கான சரியான காரணங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. சும்மா நம் ஆறுதலுக்காக 'ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை' என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இறுதி நிமிடம் வரை புனித்  பிட்டாக, ஆரோக்கியமாகத்தான் இருந்திருக்கிறார். 

வாடகை வீட்டில் இருப்பவர் குறைந்தது ஒரு மாதம் முன்பாக 'நான் காலி செய்யப் போகிறேன்' என்று ஓனருக்கு நோட்டிஸ் தரவேண்டும் என்பார்கள். உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை. ஒரு திரைப்படத்தில் இண்டர்வெல் கார்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் 'தி எண்ட் கார்டு’ காட்டிப் பாதியில் அபத்தமாக நின்றுவிடும் ஒரு சுவாரஸ்யத் திரைப்படம் போல திடீரென்று விலகி விடுகிறது உயிர்!

இது தத்துவமோ, வேதாந்தமோ, எதிர்மறை உணர்ச்சிப் பிரச்சாரமோ அல்ல. இதில் நேர்மறையாகச் சிந்திக்கவும் பல விஷயங்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு! முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு, முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம். 

அதேவேளை இந்த விஷயங்களைக் கொஞ்சம் யோசிப்போம். பகை, போட்டி, பொறாமை, பேராசை, ஈகோ இவை எல்லாம் தேவை இல்லாத லக்கேஜ்ஜுகள். எப்போது யார் போய்ச் சேருவார்கள் என்றே தெரியாது. அப்புறம் 'ச்சே, நேத்துக் கூடப்  பார்த்தேனே... பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் சிரிச்சுப் பேசி இருக்கலாமே' என்று அங்கலாய்த்துக் கொள்வதில் பொருள் இல்லை. நிகழ்காலத்தில் வாழ்வது, மேலே சொன்னது போல நாம் போடும் 'முப்பது வருடத்  திட்டத்தைப்' பார்த்து மெல்லப் புன்னகைக்கிறது முதுகின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் நம் மரணம். 

தொலையாத கவலைகள். உலகின் பாரத்தை எல்லாம் நம் தோள் மீதி ஏற்றியது போலத் தூக்கிச் சுமக்கும் கவலைகள். 'செத்ததற்கு அப்புறம் என் குடும்பம் என்ன செய்யும்?' என்பது போன்ற கவலைகள். உண்மை என்னவென்றால் 'நாம் இல்லாவிட்டாலும் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள்! நம்மால் தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பைத் தூரப் போடுவோம். பற்றின்மை... பொருட்களை நாம் உபயோகிக்கலாம். பொருட்கள் நம்மை உபயோகிக்கத் துவங்கும் புள்ளியை அறிந்து கொண்டு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்று விட வேண்டும். எந்த நிமிடம் மரணம் வந்து அழைக்கும் போதும் 'சரி, வா, போகலாம்' என்று உதறி விட்டுச் செல்லும் பக்குவம் வேண்டும்.

 நிலையற்ற வாழ்வில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மகத்தான பரிசு தான் என்று தோன்றுகிறது. 'இன்று நான் படுக்கையில் இருந்து எழுந்து விட்டேன், வரவிருக்கும் இந்த நாளுக்கு நன்றி' என்று எழுந்திருக்கும் போதும், 'இன்று ஒரு நாளை நான் கடத்தி விட்டேன், இன்றைய நாளுக்கு நன்றி' என்று இறைவனுக்கோ, பிரபஞ்சத்துக்கோ நன்றி சொல்லத் தெரிந்திருத்தல். ஒவ்வொரு தினத்தையும் வாழ்வின் கடைசித் தினம் போல வாழப் பழகிக் கொள்ளுதல்.

கடவுள் நம்பிக்கைக்கு இது ஒருவிதத்தில் ஆத்திகர்களின் advantage. 'காலா, உன்னைக் காலால் எட்டி உதைப்பேன்' என்னும் தைரியத்தைத் தரும் நம்பிக்கை. 'அவன் பார்த்துக் கொள்வான், இம்மையிலும், மறுமையிலும் என்னைச் சரியான இடத்துக்கு அவன் கூட்டிச் செல்வான்' என்ற திட நம்பிக்கை. மரணமும் இவர்களுக்கு இது ஒரு கீறல் மட்டுமே. மரணத்தின் போது ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை முழுவதும் நம் கண் முன்பு ஒரு திரைப்படம் போல பிளாஷ் ஆகுமாம். அப்போது அந்தத் திரைப்படம் பார்ப்பதற்குச் சிறந்த ஒரு ’ஃபீல் குட் மூவியாக’ இருக்க வேண்டாமா? 

click me!