2025 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி நோய்களுக்கு விடை கொடுங்கள். சீரான உணவு, லேசான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் சமூக உறவுகளைப் பேணுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
2025 ஆம் ஆண்டு பிறந்தவுடன் உங்கள் வீட்டு காலண்டர் மாறுவது போல, உங்கள் சில பழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நோய்களைத் தவிர்க்கலாம். 2025 ஆம் ஆண்டில் எந்தப் புதிய பழக்கங்கள் உங்களைப் பெரிய நோய்களிலிருந்து காப்பாற்றும் என்பதை அறிந்து கொள்வோம்.
புத்தாண்டில் சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
2018 ஆம் ஆண்டில் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 மில்லியன் மக்கள் தவறான உணவுப் பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. உணவில் அதிக உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது ஆகியவை இதில் அடங்கும். எனினும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் கொட்டைகளை போதுமான அளவு சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. இதன் காரணமாக, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு குறைகிறது என்றும அவர்கள் தெரிவிக்கின்றனர்.
லேசான உடற்பயிற்சியுடன் தொடங்குங்கள்
JAMA இன்டர்னல் மெடிசின் ஜர்னலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாடு உங்கள் ஆயுளை 3.4 ஆண்டுகள் வரை அதிகரிக்கும். நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், தினமும் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்ற லேசான உடற்பயிற்சிகளுடன் தொடங்கலாம். இது தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும்.
நல்ல தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இன்றைய வாழ்க்கை முறையில் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது மிகவும் கடினமாகிவிட்டது. பலரும் 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்கள், இது இதய ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். 7 முதல் 9 மணி நேரம் தூங்கினால், நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும், மூளை நச்சுத்தன்மையிலிருந்து விடுபடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹார்மோன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சமூக உறவுகள் ஆயுளை அதிகரிக்கும்
பெர்ஸ்பெக்டிவ்ஸ் ஆன் சைக்காலஜிக்கல் சயின்ஸில் 2015 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தனிமை இறப்பு அபாயத்தை 26 சதவீதம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. உங்கள் நல்ல சமூக உறவுகள் மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலம் வாழவும் உதவுகின்றன. சமூகத்திலும் குடும்பத்திலும் மற்றவர்களுடன் இணைந்து வாழும் நபர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவு.