குளிர்காலம், ஓமைகிறான் போன்ற பாதிப்புகளிருந்து... குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

By manimegalai aFirst Published Jan 12, 2022, 9:43 AM IST
Highlights

குளிர்காலம், ஓமைகிறான் போன்ற பாதிப்புகளிருந்து, குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க  தேவையான உணவுகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நவீன காலத்தில் இளம் பெற்றோர் பலருக்கு தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் எளிதில் ஜீரணமாகும் படியான உணவுகளை சாப்பிட வைப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். குழந்தைப் பருவத்தில் சரியான கவனிப்பு இல்லாமை, சத்தான உணவு வகைகளை கொடுக்க தவறுவது போன்றவை குழந்தையின் உடல் நலனை பாதிக்கும். இந்தியாவில் பல குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதற்கு இவை முக்கிய காரணமாக அமைகின்றன. 

குளிர்காலம் தொடங்கி விட்ட நிலையில், குழந்தைகளை நாம் இன்னும் கவனமாக கவனித்து கொள்ள வேண்டும். ஏனெனில், அதிக குளிர் மற்றும் தூசு காரணமாக காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை எளிதில் தாக்குகிறது. ஓமைகிறான் போன்ற பாதிப்புகளிருந்து குழந்தைகளை பாதுகாக்க, எவ்வளவுதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும் குழந்தைகள் மிக எளிதில் இது போன்ற பருவ காலங்களில் நோய்வாய் படுகிறார்கள்.

​குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை சாதாரண செயலாக எண்ணாமல் பொறுப்பான செயலாக எண்ண வேண்டும். ஏனெனில், வளரும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பது, எதிர்காலத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பல விஷயங்களை முடிவு செய்கின்றன. எனவே உணவு விஷயத்தில் தாய்மார்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, குழந்தைகளின், உடல் பருமன் என்பது இன்று உடல் நல பிரச்சனையாக மட்டுமன்றி சமூக அளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்பது தான் சிறந்த உணவுப்பழக்கம். 

ஆரோக்கியமான உணவு என்று வரும் போது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுக்கு முதல் இடம் கிடைக்கிறது. மேலும் சரியான திட்டமிடுதல் மூலம் நீங்கள் இந்த குளிர் மற்றும் ஓமைகிறான் காலங்களில், உங்கள் குழந்தைகளை நிச்சயமாக இது போன்ற நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும்.  குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே வைத்து நாம் பார்த்து கொண்டாலும், சில ஆரோக்கியமான உணவுகள் மூலம் மட்டுமே அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். குளிர் காலத்தில் குழந்தைகள் பொதுவாக வயிறு சார்ந்த பிரச்சனைகள், பேதி, ஒவ்வாமை போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். எனவே அவர்களது உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது. சில குறிப்பிட்ட உணவுகள் குழந்தைகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ உதவுகிறது. 

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவுகள் பற்றி  கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நிரம்பி உள்ளதால் இது குழந்தைகளுக்கு ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் உணவு அல்லது சூப் போன்ற உணவுகளில் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

 கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இவை குளிர்காலத்தில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

வெள்ளை ரத்த அணுக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் கேரட்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை சீராக்க உதவுகிறது.

​பேரிச்சம்பழம்

குளிர்காலங்களில் நமது உடலை சூடாக வைத்திருக்க பேரிச்சம் பழங்களில் உள்ள வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உதவுகின்றன. இந்த பேரிச்சம் பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.பேரிச்சம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் உடலில் வளர்சிதை மாற்றத்தை தூண்டும் ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் தான் அதிக அளவில் குளிர்காலங்களில் பேரிச்சம்பழம் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.

​மாதுளை

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது குடல் புழுக்களை அழிக்கவும் உதவுகிறது.

​நெல்லிக்காய் ஜூஸ்

பொதுவாக குழந்தைகள் நெல்லிக்காய் ஜூஸ் போன்ற ஆரோக்கிய பானங்களை அருந்த மாட்டார்கள். இருப்பினும் இதில் அதிக அளவு நன்மை உள்ளதால் அவர்களுக்கு இதை எப்படியாவது கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதில் வைட்டமின் சி மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய ஊட்டச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. நெல்லிக்காய் சாறு தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

 சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் உடலில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது. தினசரி குழந்தைகளுக்கு ஒரு ஆரஞ்சு பழத்தை உண்ணக் கொடுக்கலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிரம்பிய உள்ளதால் இவை குளிர்காலத்தில் குழந்தைகளை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா அல்லது வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை கொடுக்கலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, போலேட் மற்றும் லுடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக கீரையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது குழந்தைகளில் செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

பொதுவாக குழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுவார்கள். இதுபோன்ற மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய கீரை உதவுகிறது. பருப்பு அல்லது சூப்களில் இந்த கீரையை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 

click me!