இந்த கட்டுரையில் இளநீர் இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தற்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பருவத்தில் பல இடங்களில் இளநீர் விற்பனை ஆகும். இந்த இளநீரில் ஒரு ரெசிபி செய்யலாம் தெரியுமா..? அது வேற ஏதுமில்லைங்க 'இளநீர் இட்லி' தான். இளநீரில் இட்லி செய்யலாமா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? ஆம்.. இந்த இட்லி வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் ஒரு அருமருந்தாகும். இந்த இட்லியை செய்வது மிகவும் எளிது.
பொதுவாகவே பலரது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை தான் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி இருந்தால் இன்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த இளநீர் இட்லியை செய்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் வேண்டுமென்று சொல்லும் அளவிற்கு அதன் சுவை மிக அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் இளநீர் இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - ஒரு கிலோ
உளுந்து - 200 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்
இளநீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இளநீர் இட்லி செய்ய முதலில்_ இட்லி அரிசி மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதுபோல உளுந்தையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது அரிசி மற்றும் வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அதுபோல, உளுந்தையும் தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்த அரிசி மாவு மற்றும் உளுந்து மாவை ஒன்றாக ஒரே பாத்திரத்தில் சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இதனுடன் இளநீரையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் புளிக்க விட்டு இட்லி சுட்டால் இளநீர் இட்லி ரெடி!! இந்த ரெசிபியை உங்களது வீட்டில் ஒருமுறை செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..