
தொழில் சிந்தனையும், நிர்வாகத்திறனும் ஒவ்வொரு பெண்ணிடமும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களிடம் ஒருங்கிணைக்கும் ஆற்றலும், வழி நடத்திச்செல்லும் ஆற்றலும் உருவாகிவிட்டதை நம்மால் ஒவ்வொரு வீட்டிலும் காண முடியும். அதுபோல் கற்றுக்கொள்ளும் திறனும், கற்றதை வெளிப்படுத்தும் திறனும் பெண்களிடம் அதிகம் இருக்கிறது. இருப்பினும், தொழில் முதலீட்டில் ஆண்களுக்கு கிடைக்கும் அதே சலுகை பெண்களுக்கு கிடைப்பதில்லை.
அதுமட்டுமின்றி, தொழில் துவங்க நினைக்கும் பெண்களை சமூகம் கேலி செய்து, பல இடங்களில் அவர்களை முடக்கிவிடுகிறது. தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு ஆண்கள் தான் தகுதியானவர்கள் என்ற எண்ணமே இதற்கு முக்கியக் காரணம்.
சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் பெண்கள், ஆண்களை விட உயர்ந்த பதவியில் இருக்கும் போது ஆண்களின் அணுகுமுறை என்ன? என்பது தொடர்பான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில், பெரும்பாலும், பெண்கள் உயர் பதவியில் இருக்கும் போது, அவர்களிடம் ஆலோசனை கேட்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு, தங்கள் பணிகளை தொடர்வதில் உள்ள சிரமங்களை எடுத்து கூறினர்.
இருப்பினும், இவற்றையெல்லாம் கடந்து தொழிலில் வெற்றியடைந்த பெண் தொழில்முனைவோர்கள், தாங்கள் சமாளித்த சவால்கள் மற்றும் தங்களின் வளர்ச்சி போன்றவற்றில், ஒரே மாதிரியான மனநிலையைக் கொண்டுள்ளனர். இப்படி பல துறைகளில் வெற்றியாளர்களாக மகுடம் சூடிய பெண்களிடையே காணப்படும் பொதுவான சில பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சிறந்த சிந்தனையாளர்களாக இருப்பவர்கள்:
தொழிலில் வெற்றிபெற்ற பெண் தொழில்முனைவர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களாக இருப்பவர்கள். யோசனைகள், அறிவு, தொடர்புகள் போன்றவற்றைப் பகிர்தல், நம்பிக்கையின் மூலம் எளிதில் உறவுகளை உருவாக்குதல் போன்றவை சிந்தனையாளர்களின் பொதுவான முக்கியப் பண்புகள் ஆகும்.
இறுதி முடிவுகளை எடுப்பவர்கள்:
வெற்றிகரமான பெண் தொழில்முனைவோர்கள் அனைவரும், பெரும்பாலோர் பேசுவதை விட அதிகம் கேட் கும் திறன் படைத்தவர்களாம். இவர்கள் பெரும்பாலும், மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பவர்கள். இருப்பினும், இறுதி முடிவை தாங்கள் மட்டுமே எடுப்பார்கள். குறிப்பாக, தாங்கள் எடுக்கும் முடிவுகள், தாங்கள் கொண்டிருக்கும் தகவல்களையும் (information), விவரங்களையும் பொறுத்தே அமையும். இவை உங்களிடம் இல்லை என்றால் உருவாக்கி கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்களைப் போன்று கவனம் செலுத்துபவர்கள்:
நீங்கள் உங்களது தொழிலில் உரிமையாளர் அல்லது முதலீட்டாளராக இருந்தால், உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் வாடிக்கையாளர்களைப் போன்று கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக, உங்கள் தொழிலில் ஒரு பணியாளராகவும், பங்குதாரராகவும் உங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நெகட்டிவ் சிந்தனைகளையும் ‘பாசிட்டிவான" மாற்றுபவர்கள்:
நம்முடைய தொழிலில், எல்லாம் நமக்கு சாதகமாக இருந்தால் நமக்கு எப்போதும் ‘பாசிட்டிவான' எண்ணங்களே ஆக்கிரமித்திருக்கும். அதேசமயம், தொழில் 'நெகட்டிவாக' செல்லும் பட்சத்தில் பெரும்பாலான தொழில்முனைவோருக்கு அதிலிருந்து வெளியேறும் எண்ணமே தோன்றும். வெளியேறும் எண்ணம் உள்ளவர்கள் தொழிலில் வெற்றி அடைந்ததில்லை. எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
வெற்றிக்கு, தோல்வியே முதல் படி என்பதை உணர்ந்தவர்கள்:
சில நேரங்களில், வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வேறுபாடு உங்களுக்கான சரியான தொழிலைத் தேர்வு செய்வதைப் பொருத்து அமையும். சில சமயங்களில் சந்தை நிலவரம் (market conditions) உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தேர்வு செய்யும் தொழில் உங்களுக்கு வெற்றியடையாமல் போகும். இறுதியில் உங்களது விடாமுயற்சியே வெற்றியைத் தரும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி:
பெண்கள் தங்கள் நிறுவனங்களுக்கு எவ்வளவு வெற்றிகரமானவர் என்பதை உணர்ந்துகொள்ளாமல் வியாபாரத்தை உருவாக்குகிறார்கள். ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட மிகவும் அவசியமான இரண்டு விஷயங்கள் ‘சோதனை’ செய்து பார்ப்பது, மீண்டும் மீண்டும் ‘முயற்சிப்பது’. தொழிலில் வெற்றியடைந்த தொழில்முனைவோர் அனைவரும், இந்த இரண்டு விஷயங்களையும் கண்டிப்பாக கடைபிடிப்பவர்கள். எனவே, புதிதாக ஒரு தொழிலை உருவாக்க நினைக்கும் பெண் தொழில்முனைவோருக்கு இந்த இரண்டு விஷயங்களும் அவசியமானவையாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.