
இன்றைய நவீன உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் பலருக்கு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலருக்கு டீ குடித்தால், சிகரெட் பிடித்தல், மாத்திரைகள் விழுங்கினால் மட்டுமே மலம் வெளியேறும் என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் உடனடியாகப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில், மேற்சொன்ன விஷயங்களால் அதிக அளவு மலச்சிக்கல் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. எனவே, மேற்கூறிய எந்தப் பொருள்களின் உதவியும் இல்லாமல், இளகிய மலமாக வெளியேறுவதுதான் உடலுக்கு நல்லது. சாப்பிட்ட உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டும் காரணியே மலம். `சில நாள்கள் வரும், சில நாள்கள் வராது’என்று அலட்சியமாக விடக்கூடிய விஷயமல்ல மலம். மலச்சிக்கல் உண்டாவதற்கான காரணிகளை ஆராய்ந்து, மலத்தை இளகியதாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மலச்சிக்கலை உண்டாக்கும் முக்கிய காரணிகள்:
மேற்கத்திய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது மலச்சிக்கல் உண்டாவது உறுதி. ஏனெனில், மேற்கத்திய உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள் ஆகும்.
சிலவகை மருந்துகளை உட்கொள்வதாலும், முதிர்ந்த வயதின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். மன அழுத்தத்துக்கும், மலச்சிக்கலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்க வேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். வறண்டு கடினப்பட்ட மலம், மலப்பாதையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மலம் கழிக்கும் முறை முக்கியம்:
மேற்கத்திய கழிப்பறையில் (Western Toilet) அமர்ந்துகொண்டு மலம்கழிக்க முயலும்போது, மலம் வெளியேறாமல் தவிப்பவர்கள் உண்டு. மூட்டுகளில் எந்தப் பிரச்சனையும் இல்லையெனில், நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும். மேற்கத்திய கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிக அளவில் இருக்கும். குத்தவைத்து மலம் கழிக்கச் சிரமப்பட்டு, மேற்கத்திய பாணியில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாகக் கழிவுகளை வெளியேற்ற முடியாது. மேலும், மலப்பை தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் வெளியாவதில் சிரமத்தை உண்டாக்கும். அதே வேளையில் தொடைப் பகுதிகள் வயிற்றுத் தசைகளை அழுத்தும் அளவுக்கு குத்தவைத்து மலம் கழிக்க முயலும் முறை, மலத்தை முழுமையாக வெளியேற்றும், இடுப்புப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
மலமிளக்கி மருந்துகள் எப்போது தேவை?
மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயல வேண்டும். திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும். முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால், 15 வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு. இயற்கையை இயக்க, செயற்கையைத் தேவையில்லாமல் வரவழைப்பது தவறு.
நார்ச்சத்து உணவுகள் நலம் தரும்!
நார்ச்சத்துள்ள உணவுகள், குடலின் அசைவுகளைத் துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும். கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்துள்ள உணவுகளைக் கலந்து உட்கொள்ளலாம். பசலை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழு தானியங்கள், கொட்டை வகைகள், வெந்தயம் போன்றவை மலச்சிக்கலை சரிசெய்வதில் சிறந்த பங்களிப்பை தர வல்லது. உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்யும். நூறு கிராம் வெந்தயத்தில் 65 சதவிகிதம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும். இளவெந்நீர், குடலின் அசைவுகளை அதிகரிக்க உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம். முன்பெல்லாம் விளக்கெண்ணெயை அவ்வப்போது சிறிதளவு குடிக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது. இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது.
செரிமானத்தைச் சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும். உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும்.
சித்த மருத்துவத்தின் பயன்பாடுகள்:
சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள `கிளைக்கோசைடுகள்' செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய் என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன. தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது என்பதே சித்த மருத்துவர்களின் ஆலோசனையாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.