வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார் பங்கிம் சந்திர சட்டர்ஜி. தந்தை துணை ஆட்சியர். இவரை செல்லமாக வளர்த்த பெற்றோர், வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்துப் பாடம் கற்பித்தனர்.
மிட்னாப்பூர் கான்வென்ட் பள்ளியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுத்தார். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார். இவரது கவிதைத் தொகுப்பு 'லலிதா ஓ மானஸ்' என்ற தலைப்பில் வெளிவந்தது. இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை மக்கள் மதிக்காததால்தான் அந்நியர்கள் மனம்போனபடி நடக்கின்றனர் என கருதினார். இலக்கியத்தின் வாயிலாக, இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தும் முனைப்புகளை மேற்கொண்டார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில், ஒவ்வொரு இந்தியனும் தேசிய பாடலாக, 'காட் சேவ் தி குயின்' என்ற ஆங்கில பாடலை பாடும்படி வற்புறுத்தப்பட்டனர். இதை எதிர்த்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர், நவம்பர் 7, 1875ல், 'வந்தே மாதரம்' என்ற பாடலை எழுதினார். 'இந்த பாடல் பிரபலமாகும்போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால், இந்த பாடல் ஒவ்வொரு இந்தியனும் பாடும் வேத மந்திரமாக இருக்கும்...' என்று கூறினார். 'வந்தே மாதரம்' என்ற வார்த்தையும், பாடலும், பிரபலமடைவதை விரும்பாத பிரிட்டிஷார், இந்த பாடலை தடை செய்தனர்.
உடனே, பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்த பாடலை அவர் எழுதிய, 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வருவது போல், இடம்பெறச் செய்தார். இந்திய மக்கள், இதை ஏற்றுக்கொண்டதோடு, 'வந்தே மாதரம்' என்ற சொல், தேச பக்தர்களிடையே சுதந்திர வேட்கையை அதிகப்படுத்தியது. பீடான் சதுக்கத்தில், 1896ல் நடந்த, இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில், ரவீந்திரநாத் தாகூர், இந்த பாடலுக்கு இசையமைத்து பாடினார். இந்த பாடலின் முதல் இரண்டு வரிகள் சமஸ்கிருதத்திலும், மற்ற வரிகள் வங்காள மொழியிலும் இருந்ததால், முதலிரு வரிகள் வேத மந்திரத்தை குறிக்கிறது என்ற காரணம் காட்டி, முதலிரண்டு வரிகளை பாட எங்களுக்கு உரிமை உண்டு என்று கூறி, போராடினர் மக்கள்.
அக்டோபர் 28, 1937ல், கூடிய காங்கிரஸ் செயற்குழுவில், 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு வரிகள், தாய் மண்ணின் பெருமையையும், அவள் அளித்துள்ள வளங்களையும் குறிப்பதாகும். இதில், எவ்வித அரசியலும் இல்லை என்று கூறி, தடையை திரும்ப பெற வைத்தது. ஜனவரி 24, 1950ல் கூடிய அரசியலமைப்பு கூட்டத்தில், இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், 'ஜன கன மன பாடல் தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' பாடல், நாட்டு பாடலாகவும் தொடர்ந்து இருக்கும்...' என, அறிவித்தார். கல்கத்தவில் 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது.
'தாயை வணங்குவோம்' என்று பொருள்படும் 'வந்தேமாதரம்' கோஷம் இந்திர சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி, நாடு முழுவதும் ஒலித்தது. இது ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது. வன்முறையைத் தூண்டுவதாக கூறி இந்த கோஷத்தை அரசு தடை செய்தது. பின்னர் இப்பாடல் இந்திய தேசத்தின் கீதமாகப் புகழ்பெற்றது. இறுதி நாட்களில் ஆன்மிகம் குறித்து எழுதினார். நவீன வங்க இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் பங்கிம் சந்திர சட்டர்ஜி 56-வது வயதில் (1894) நோய்வாய்ப்பட்டு காலமானார்.