India@75 Freedom Fighters: வாஞ்சிநாதனின் துப்பாக்கி பேசிய கதை- தென்னகத்தில் பதிவான ஒரே ஆயுதப் போராட்டம்!

By Raghupati R  |  First Published Mar 28, 2022, 1:13 PM IST

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வட இந்தியாவில் ஆயுதப் போராட்டங்களும் ஒரு வடிவமாக இருந்தது. ஆனால், தென்இந்தியாவில் ஆயுதம் ஏந்திய ஒரே போராட்டமாக வரலாற்றில் நம் தமிழகத்தில்தான். துப்பாக்கி ஏந்தி, சுதந்திரப் போராட்டத்தில் அழியாப் புகழை தேடிக்கொண்டவர், வாஞ்சிநாதன்.


தமிழகத்தில் தென்கோடியில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 1886-ஆம் ஆண்டில் ரகுபதி ஐயர் - ருக்மணியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவருடைய இயற்பெயர் சங்கரன். வாஞ்சியில்தான் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் திருவனந்தபுரத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பொன்னம்மாள் என்பவரை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு புனலூரில் உள்ள காட்டு இலாக்காவில் பணியாற்றினார். அரசு பணியில் இருந்தபோதும், சுதந்திரப் போராட்டத்தில் தீவிர நாட்டம் கொண்டவராக இருந்தார் வாஞ்சிநாதன்.

Latest Videos

undefined

அந்நாளில் பிரிட்டீஷ் அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தபோது தமிழகத்திலும் போராட்டங்கள் சூடுபிடித்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் உணர்ச்சு பொங்கும் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சிநாதன் ஈர்க்கப்பட்டார். இதனால் விடுதலைப் போராட்டத்தில் வாஞ்சிநாதனும் தீவிரமானார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ‘பாரத மாதா சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இதில் வாஞ்சிநாதனும் ஒருவராக இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படுவோருக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியிலிருந்து உதவிகள் கிடைத்தன. அவர்களுடன் வாஞ்சிநாதனுக்கு தொடர்பு கிடைத்தது. புதுச்சேரியில்தான் வாஞ்சிநாதன் ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டு, துப்பாக்கிகளை இயக்க கற்றுக்கொண்டார். சுதந்திர போராட்டம் தனலாக தகித்தபோது, அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப்பாதையில் குதித்தார். அந்தக் காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆஷ் துரை, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கிய வ.உ.சிதம்பரம் பிள்ளை மீது அடக்குமுறையைக் கையாண்டார். இன்னொரு புறம் ஜார்ஜ் ஐந்தாம் மன்னரின் முடிசூட்டுவிழாவால் ஆங்கிலேயே அதிகாரிகள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

இதற்கெல்லாம் சேர்ந்து பாடம் கற்பிக்க ஆஷ் துரையைக் கொல்வது என்று வாஞ்சிநாதனும் அவருடைய நண்பர்களும் முடிவு செய்தனர். இதற்காக குற்றாலம் ஐந்தருவி மலைப் பகுதியில் தலைமறைவாகி திட்டம் தீட்டினார்கள். 1911-ஆம் ஆண்டு  ஜூன் 17 அன்று, கொடைக்கானலில் படிக்கும் தன் பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு தன் மனைவிடன் ஆஷ் துரை கிளம்பினார். ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் ஆஷ் துரை அமர்ந்திருந்தார். இதை முன்கூட்டியே அறிந்து அங்கு வந்த வாஞ்சிநாதன் ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். திடீரென ஒருவர் நுழைந்ததை எதிர்பார்க்காத ஆஷ் சற்றே ஆச்சரியம் அடைந்தார். ஆஷ் சுதாரிப்பதற்குள் தன்னுடைய இடுப்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்த  துப்பாக்கியை எடுத்து ஆஷை நோக்கி வாஞ்சிநாதன் சுட்டார்.

இந்தக் குண்டு ஆஷின் நெஞ்சில் பாய்ந்தது. ரயில் பெட்டிக்குள்ளேயே ஆஷ் சரிந்து கீழே விழுந்தார். ரயில் பெட்டியிலிருந்து இறங்கிய வாஞ்சிநாதன், போலீஸார் கையில் சிக்காமல் அந்த நடைமேடையிலேயே தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆஷ் கொலை வழக்கு முக்கியத்துவம் பெற்றது. தென் இந்தியாவில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக கொலை செய்யும் அளவுக்கு மக்கள் செல்லமாட்டார்கள் என்று நம்பியிருந்த ஆங்கிலேயர்களின் எண்ணத்தை இச்சம்பவம் தவிடுபொடியாக்கியது. ஆங்கிலேயர்களுக்கு கிலியை ஏற்படுத்திய இந்தக் கொலை, சுதந்திர வர்லாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வாஞ்சிநாதனின் வீரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், மணியாச்சி ரயில் நிலையம், வாஞ்சி - மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் மாற்றப்பட்டது.

click me!