
கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் 8 பறவைகள் திடீரென இறந்தன. இந்த சம்பவத்தை அடுத்து உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
பூங்கா மூடப்பட்டது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பறவை காய்ச்சல் பாதிப்பால் செவ்வாய்க்கிழமை பூங்கா மூடப்பட்டது. இறந்த பறவைகளில்,வாத்து மற்றும் நீர்க்கோழி உட்பட 8 பறவைகள் இறந்துள்ளன. இறந்த ஜோடி வாத்துகளை ஜலந்தா கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். மேலும் அதன் மருத்துவ அறிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அதன்பிறகே காய்ச்சல் ஏன் ஏற்பட்டது என அறியமுடியும்.
பறவை காய்ச்சல் தொடர்பாக மத்திய பூங்கா அதிகாரிகள் டெல்லி தேசிய பூங்காவை புதன்கிழமை பார்வையிட்டனர்.
பறவை காய்ச்சல் பாதிப்புக்கு முன், பூங்காவில் 40 நீர்க்கோழிகளும், 20 வாத்துகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பூங்காவில் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல், பார்வையாளர்களை பாதிக்காது என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், கால்நடை பராமரிப்புத் துறை, கடந்த மாதம் இந்தியா பறவை காய்ச்சல் இல்லாத நாடாக அறிவித்தது. ஆனால் அப்படி அறிவித்த ஒரு மாத காலத்துக்குள்ளாகவே பறவைக் காய்சலால் 8 பறவைகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில், அதே பூங்காவில் 46 மான்கள் இறந்தது. அதற்கு, வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் என்ற நோயால்தான் இறந்தது என்று அதிகாரிகள் காரணம் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனவரி மாதத்தில் திரிபுராவில் பறவை காய்ச்சல் பரவியது. அப்போது, பறவை காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட திரிபுரா அரசுக்கு சொந்தமான 8 ஆயிரத்து 500 கோழிகள் கொல்லப்பட்டன குறிப்பிடத்தக்கது.