தெலங்கனா தேர்தலில் போட்டியில்லை; காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு - ஒய்.எஸ்.ஷர்மிளா!

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார்


மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே  அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

Latest Videos

இந்த நிலையில், தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமது ஒய்.எஸ்.ஆர்.டி.பி., கட்சி களம் காணவில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு பயனளிக்கும் வகையில், தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

“தெலங்கானா மாநிலம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். தெலங்கானா மக்கள் கேசிஆரின் தவறான ஆட்சியால் கொதிப்படைந்துள்ளனர். அவரது கொடூரமான ஆட்சியை கவிழ்க்க தயாராக உள்ளனர். இந்த ஒன்பதரை ஆண்டுகளில், ஒரே குடும்பத்தின் பேராசையாலும், கொடுங்கோன்மையாலும் தெலங்கானாவின் செல்வம் எப்படிப் பறிக்கப்பட்டது என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். கே.சி.ஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் மிகப்பெரிய ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சிக்கியுள்ளது.” என்று ஒய்.எஸ்.ஷர்மிளா கடுமையாக சாடினார்.

பூஜா பட் நில வழக்கு: நீலகிரி மாவட்டம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

தெலங்கானா மக்களின் நலனுக்காக, ஒத்த சிந்தனை கொண்ட அனைத்து கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “இதற்காக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதியின் தோல்வியை உறுதி செய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பிருப்பதாக உணரப்படுகிறது. எனவே, ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்குகள் பிரியாமல் தவிர்க்கும் பொருட்டு, நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவை வழங்குகிறோம்.” என்று ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவையடுத்து, காங்கிரஸ் உடனான மோதல் காரணமாக, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் தனிக்கட்சியை ஆரம்பித்தார். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021ஆம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் தனிக்கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவை எதிர்த்து கடுமையாக அரசியல் செய்து வரும் ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியுடன் அண்மைக்காலமாகவே நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில், சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்தித்தார் என்பதும், அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!