
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சாகர் துடு (22) என்பவர், அருவி ஒன்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் சாகர் துடு. நேற்று தனது நண்பர்களுடன் கோராபுட் மாவட்டத்தில் உள்ள துடுமா அருவிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, சாகர் அருவியின் மையப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்து ட்ரோன் கேமரா மூலம் அருவியின் அழகை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியின் நடுவே சாகர் சிக்கிக்கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில்...
கரையில் இருந்த அவரது நண்பர்கள் கயிறு மூலம் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், வெள்ளப்பெருக்கு அதிகமானதால், சாகர் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் முழுவதையும் அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாகரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சாகர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையே, சாகரை தேடும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாகர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.