
ஒருபுறம், படித்துவிட்டு, இளைஞர்கள், சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைக்க முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கேரளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சாப்ட்வேர் வேலையே வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, கழுதை மேய்க்கச் சென்றுள்ளார்.
கழுதை பண்ணை வைத்துள்ள அந்த இளைஞர் கழுதைப்பால் மூலம் அழகுசாதனப் பொருட்கள் தயாரித்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
எர்ணாகுளம் மாவட்டம், ராமமங்கலத்தைச் சேர்ந்தவர் அபே பேபி. எம்.பி.ஏ. முடித்த அபி பேபி, 2005ம் ஆண்டு வரை பெங்களூருவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியத்துக்கு பணியாற்றி வந்தார். இந்நிலையில், அந்த வேலையை உதறிவிட்டு இப்போது தன் சொந்த ஊரான ராமமங்கலத்தில் கழுதைப் பண்ணை வைத்து சம்பாதித்து வருகிறார்.
இது குறித்து அபே பேபி கூறியதாவது-
பைபிலில் ஏசு குதிரையோடு சுற்றாமல் ஏன் கழுதையோடு ஏன் அனைத்து இடங்களுக்கும் சென்றார் என்ற கேள்வி என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்து. கழுதைக்கும் ஒரு சிறப்பு இருப்பதால்தான் பைபிலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.
இதையடுத்து, கடந்த 2005ம் ஆண்டு என்னுடைய ஐ.டி. பணியை ராஜினாமா செய்து, கழுதைப் பால் குறித்த ஆய்வில் இறங்கினேன். அந்த ஆய்வில் நூற்றாண்டுகளாக கழுதைப்பால் என்பது வாழ்நாளை நீட்டிக்கும் ஒரு மருந்தாக பயன்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தேன்.
ரோமானிய இளவரசி கிளியோபாட்ரா கூட தனது உடல் அழகை பராமரிக்க கழுதைப்பாலை பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிந்தேன். இதற்காக 700 கழுதைகள் வரை வளர்த்து அதில் கிடைக்கும் பாலில் கிளியோபாட்ரா குளித்துள்ளார்.
இதையடுத்து, கழுதைப்பாலின் விஷேசத்தன்மை அறிந்து அந்த கழுதைப்பாலில் இருந்து அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தேன். அதற்காக எனது சொந்த ஊரில் சிறிய கழுதைப்பண்ணையைத் தொடங்கினேன். 2016ம்ஆண்டு தென் மாநிலங்கள் முழுவதும் அலைந்து 32 கழுதைகளை வாங்கினேன். இந்த பண்ணையை உருவாக்க 10 ஆண்டுகள் ஆய்வு ேதவைப்பட்டது.
எனக்கென்று எந்த உதவியும் இல்லை, முன்உதாரணமும் இல்லை. தனிஆளாக இதைத் தொடங்கினேன். எனது சொந்த ஊரில் 2.5 ஏக்கர் நிலத்தில் கழுதைப் பண்ணையை தொடங்கினேன். அவைகளுக்கு உணவில் எந்தவிதமான சமரசமும் செய்யாமல், புற்கள், உள்ளிட்ட சத்தான தீவனங்களையும் அளித்தேன்.
திடீரென்று நோய் ஏற்பட்டு ஏறக்குறைய 15 கழுதைகள் இறந்துவிட்டன. இருந்தும், தொடங்கிய தொழிலை விடக்கூடாது என்ற மனஉறுதியில் மேலும் சில கழுதைகளை வாங்கினேன்.3 ஆண் கழுதைகளும், 20 பெண்கழுதைகளையும் பண்ணையில் வளர்க்கத் தொடங்கினேன். “டால்பின் ஐ.பி.ஏ.” எனும் நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினேன்.
கழுதையில் இருந்து கிடைக்கும் பாலையும், “ரோஸ்மேரி” எனும் மூலிகை பொருட்களையும் முக்கிய பொருட்களாகச் சேர்த்து அழகு சாதனப் பொருட்களை தயாரித்தேன். முகப்பூச்சு கிரீம், பேஷியல் கிரீம், பாடி வாஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை முற்றிலும் கழுதைப்பாலில் தயாரானது என்ற பெயருடன் விற்பனை செய்தேன்.
யாரும் கழுதைப்பாலில் இதுபோன்ற பொருட்களை இந்தியாவில் இதற்கு முன் தயாரிக்காததால், எனது பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தினர் . பொருட்கள் பிடித்துப்போகவே அதிகமான வாடிக்கையாளர்கள் உண்டாகினர்.
அதுமட்டுமல்லாமல், கழுதைப்பால் தோலில் ஏற்படும் பல நோய்களை குணமாக்கும், நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது என்று கேள்விப்பட்டு பலர் கழுதைப்பால் கேட்டனர். இதையடுத்துwww.dolphiniba.comஎன்ற இணைதளத்தை தொடங்கினேன். கழுதைப்பாலையும், எனது பொருட்களையும் இணையதளம் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினேன்.
இந்தியச் சந்தையில் கழுதைப்பால் ஒரு லிட்டர் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விலை போனது. எனது அழகு சாதனப்பொருட்களும் நன்றாக விற்பனையாகின.
மக்கள் என் கழுதைப் பண்ணைக்கே வந்து கழுதைப் பாலை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். அனைத்து நோய்களுக்கும் மருந்து என்று நம்புவதால், கழுதைப்பாலை அதிகமான மக்கள் வாங்கி குடிக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையும் வீண்போகாமல் நோய்களும் தீர்வதால், அதிகமான மக்கள் நாள்தோறும் வருகை தருகிறார்கள். விற்பனையும் அதிகரித்து வருகிறது. குறைவான கொழுப்பும், லாக்டோஸ் அதிகமானது என்பதால், உடலுக்கும் சிறந்தது.
இப்போது என்னிடம் உள்ள கழுதைகளையும் விற்பனை செய்து வருகிறேன். ஒரு கழுதை ரூ80 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விலை போகிறது. கழுதை எப்படி காஸ்ட்லியாக இருக்கிறதோ அதேபோல, அதன் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களும் விலை அதிகமாக இருக்கும். இந்த கழுதை பண்ணை, அழகுசாதனப் பொருட்கள் தாயாரிப்பு மூலம் மாதத்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.