Breaking: தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கு… யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை!!

By Narendran SFirst Published May 25, 2022, 6:29 PM IST
Highlights

தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்தது. கைது செய்யப்பட்ட யாசின் மாலிக்கிடம் தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பின் யாசின் மாலிக் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். யாசின் மாலிக் மீதான வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பயங்கரவாத்திற்கு நிதி திரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் யாசின் மாலிக் சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் யாசின் மாலிக் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து அவர் இதற்காக நிதியுதவி பெற்றுள்ளார்.

இதற்காக மிகப்பெரிய கட்டமைப்பை அவர் உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யாசின் மாலிக்கின் சொத்து விவரம் குறித்து அவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தண்டனை விவரம் மே 25 ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி, அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், நான் காந்திய கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் என்று தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்திருந்தார்.

மேலும் எதற்கும் பிச்சை எடுக்க மாட்டேன். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றமே இதில் முடிவெடுக்கட்டும் என்றும் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார். யாசின் மாலிக்கின் வழக்கறிஞர், 28 வருடங்களாக நான் ஏதேனும் தீவிரவாதச் செயல் அல்லது வன்முறையில் ஈடுபட்டிருந்தால், இந்திய உளவுத்துறை அதனை நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். தூக்கு தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் என்று யாசின் மாலிக் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை நடைபெற்றது. அதில் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

click me!