
விடுமுறை காலத்தின் போது, நீதிபதிகள் குறைந்தபட்சம் 5 நாட்களாவது, நீதிமன்றத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால், நிலுவையில் உள்ள வழக்குகள் குறையும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தெரிவித்தார்.
அதேசமயம், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு மத்திய அரசு நீதித்துறைக்கு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
150-வது ஆண்டு விழா
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக், மேற்கு வங்காள கவர்னர் கே.என். திரிபாதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர்நீதிமன்ற திலிப் போஸ்லே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைமை நீதிபதி கேஹர்
நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பேசியதாவது:- நாடு முழுவதும் உச்ச நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது மிகவும் முக்கிய பிரச்னையாக உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். விடுமுறைக் காலங்களில் குறைந்தது 5 நாட்களாவது நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10 வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும்.
டிஜிட்டல் முறை
இதன் மூலம் விவாகரத்து, இருதரப்பு விவகாரங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படும். மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற மேலாண்மையால் அங்கு 80 சதவீத வழக்குகள் தீர்க்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் 3 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கோடை கால விடுமுறையில் கூடினால், அது நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க உதவியாக அமையும். இதேபோன்று காகிதங்களை தவிர்த்து டிஜிட்டல் முறையில் நீதிமன்ற பணிகளை மேற்கொள்வது என்பது ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
‘வேதனை அளிக்கிறது’
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நான் உறுதி அளிக்கிறேன். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தலைமை நீதிபதி கேஹர் பேசியது எனக்கு வேதனை அளிக்கிறது. நீதித்துறையை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நடைமுறையில் இல்லாத 1,200 சட்டங்கள் அகற்றப்பட்டன.
வீடியோ கான்பரன்சிங்
நீதிமன்றங்களில் பணிகளை எளிமைப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் தலைமை நீதிபதி கேஹர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனை நான் பாராட்டுகிறேன். வீடியோ கான்பரன்சிங் முறை நீதிமன்றங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், சாட்சியங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நேரமும், பணமும் மிச்சமாகும். 2022-ல் நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அப்போது, நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லுமாறு நீதித்துறையையும், அரசையும் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.