
குஜராத், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பசுவதை, பசுக்கடத்தல், பசுகொலைக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், கேரளாவில் சூப்பர் மாட்டிறைச்சி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றுபாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
வடமாநிலங்களில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடைகளுக்கு கிடுக்கிப்பிடி, பசுவதைக்கும், மாட்டிறைச்சிக்கும் தடைவிதிக்கும் பாரதிய ஜனதா அரசு, கேரளாவில் மாட்டிறைச்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
கேரளவின் மலப்புரம் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாரதியஜனதா கட்சியின் வேட்பாளராக என். ஸ்ரீபிரகாஷ் போட்டியிடுகிறார்கள். மலப்புரம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ஸ்ரீபிரகாஷ், மக்களிடம் தேர்தல் வாக்குறுதியாக, சூப்பரான, சுத்தமான மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன் என்று பேசி வருகிறார்.
தனது கட்சி ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை இருக்கிறது, பசுக்கொலைக்கும், கடத்தலுக்கும் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஸ்ரீபிரகாஷ்பேசுவது, குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வடமாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் குஜராத், உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர்,ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆகியவற்றில் மாட்டிறைச்சிக்கு தடையும், பசுக்கடத்தலுக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி இருக்கிறது. இங்கு மாட்டிறைச்சிக்கு தடையில்லை, பசுக்கொலைக்கு தடையில்லை.
தென் மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை, பசுக்கொலை குறித்து வாய்திறக்க மறுக்கிறது பாரதியஜனதா கட்சி. இப்படி மாநிலத்துக்கு மாநிலம் ஒரு நிலைப்பாட்டை மாற்மாற்றி பாரதிய ஜனதா எடுத்து வருகிறது.
இது குறித்து மலப்புரம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் கூறுகையில் “ சட்டவிரோத மாட்டிறைச்சிக் கடைகளை மட்டுமே மூட வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆண்ட பல மாநிலங்களில் மாட்டிறைச்சி கடைகளை மூடிவிட்டது. ஆனால், நான் கேரளா மக்களுக்கு சுத்தமான, சூப்பர் மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன். சுத்தமான இறைச்சி வெட்டும் கூடங்கள் உருவாக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.