
நிர்பயா வீட்டிலேயே இருந்திருந்தால், அவருக்கு பாலியல் பலாத்காரம் நடந்திருக்காது என்றும், பலாத்காரத்தை பெண்கள்தான் தேடிச் செல்வதாகவும், பெண்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சத்தீஸ்கர் மாநில ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் உயிரியல் துறை ஆசிரியராக ஸ்னேலதா சங்கவார் பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் இருபாலரும் படித்து வருகின்றனர்.
இவர் ஒரு நாள், வகுப்பில் பேசியதை, யாரோ ஒருவர் ரெக்கார்டு செய்து அதனை பள்ளி முதல்வரிடம் போட்டு காண்பித்துள்ளனர். ஸ்னேலதா சங்கவார் பேச்சைக் கேட்ட பள்ளி முதல்வரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்நேலதா, அந்த ஆடியோவில் பேசும்போது, பெண்கள் தங்கள் உடலை வெளிப்படுத்தும் கேவலமான ஆடைகள் மூலம், ஆண்களின் கவனத்தை ஈர்த்து பலாத்காரம் செய்ய தூண்டுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும், ஜீன்ஸ் அணிந்து கொண்டு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வரும் பெண்களும் வெட்கமே இல்லாமல் ஆண்களை அழைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இரவு 8.30 மணிக்குகூட பிளஸ் 1 பயிலும் மாணவிகள் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பதை காண முடிந்தது என்றும் அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கண்டித்ததாகவும் கூறுகிறார்.
2012 ஆம ஆண்டு, டெல்லியில், ஆண் நண்பருடன் பயணம் செய்த நிர்பயா வழக்கில் என்ன நடந்தது. நிர்பயா இரவு நேரத்தில் சென்றது அவரது கணவருடனா என்ன? யாரோ ஒரு ஆண் நண்பருடன் சென்றுள்ளார்.
அவர் வீட்டிலேயே இருந்திருந்தால், அந்த கோர சம்பவம் நடந்திருக்கமா? அவரை பலாத்காரம் செய்த ஆண்கள் மீது எந்த தவறும் இல்லை. ஒரு மனிதனின் பாதுகாப்பு என்பது அவருடைய கையில்தான் உள்ளது. நிர்பயா வழக்கில் நீதி வேண்டும் என்று அவரது பெற்றோர் கூறியிருந்தனர். அதன்படி அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், அவரது பெற்றோரால், அந்த பெண்ணை கட்டுப்படுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ஸ்னேலதாவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நிர்பயா வழக்குக்கு எதிராக ஆசிரியர் ஸ்னேலதா எப்படி நியாயப்படுத்த முடிகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.