
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல பூஜை மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும் மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தம்.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
அப்போது சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆன் லைன் தரிசன முறையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்ததும் ஏராளமானோர் இதில் பதிவு செய்து வருகிறார்கள்.
இன்று வரை சுமார் 3.50 லட்சம் பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். கடந்த மாதம் கோவில் நடை திறந்த போது கோவிலுக்கு வந்த இளம்பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 550 பேர் கோவிலுக்கு வர முன்பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
முன்பதிவு செய்யும்போது பக்தரின் பெயர், வயது, விலாசம் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இளம்பெண்களும் விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலையில் ஏற்கனவே நடைதிறந்த 5 நாட்களில் குறைந்த அளவு பெண்கள் வந்தபோதே போராட்டம் தீவிரமாக நடந்தது. இப்போது மண்டல பூஜை காலத்தில் சபரிமலை கோவில் நடை 41 நாட்கள் திறந்திருக்கும். இன்று வரை 550 பெண்கள் கோவிலுக்கு வர விருப்பம் தெரிவித்திருப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கும்.