
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூளைப் புற்றுநோயால் உயிரிழந்த மகனின் விந்தணுவை வைத்து இரட்டை குழந்தைகள் பிறக்க வைத்துள்ளனர். தங்களுக்கு பேரக்குழந்தைகளை உருவாக்கிக் கொண்டனர் அந்த வாலிபரின் பெற்றோர்கள்
புனேயைச் சேர்ந்த தம்பதி, இறந்து போன தங்கள் மகனின் செல்களைப் பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் இரண்டு பேரக் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
புனேயைச் சேர்ந்த வாலிபர் பிரதாமேஷ் தனது, மேற்படிப்புக்காக 2010ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டிற்குச் சென்றார். ஜெர்மனியில் அவர் படித்துக்கொண்டிருக்கும்போது, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பிரதாமேஷ் தொடர் சிகிச்சை பெற்றுவந்தார்.
ஜெர்மனியில் கீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கு முன் பிரதாமேஷின் விந்து செல்ககளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்டன. அந்த சிகிச்சைக்குப் பிறகு அவர் பார்வையை இழந்தார்.
ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவந்த பிரதாமேஷ் அதன் பின் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டு, இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதாமேஷ் மரணமடைந்தார்.
இளம் வயதிலேயே பிரதாமேஷ் இறந்தது, அவர் குடும்பத்தினருக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருமணம் ஆகாமலே மகன் இறந்துபோனதால் தங்களது சந்ததி முடிந்துவிடக் கூடாது எனப் பிரதாமேஷின் பெற்றோர் நினைத்தனர்.
மகனின் செல்கள் மூலம் பேரக் குழந்தைகளைப் பெற முடிவு செய்த தம்பதி, இதற்காக ஜெர்மனி மருத்துவமனையைத் தொடர்புகொண்டு பேசி பிரதாமேஷின் விந்து செல்களைப் பெற்றனர்.
பின்னர் புனேயில் உள்ள மருத்துவமனையைச் செயற்கைக் கருவூட்டலுக்காக அணுகினர். அங்கு, பிரதாமேஷின் விந்து செல்களுடன் தானமாகப் பெற்ற கருமுட்டைகளைச் சேர்த்து ஆய்வகத்தில் கரு வளர்க்கப்பட்டு, அவரது உறவுக்காரப் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்டது.
அந்தப் பெண்ணுக்குக் கடந்த திங்கட்கிழமை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. தங்கள் மகனே திரும்பக் கிடைத்துவிட்டதாக பிரதாமேஷின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.