
ஐதராபாத்தை அடுத்த உப்பல் சிலக் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத குழந்தை ஒன்று நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குழந்தையின் தலையை மட்டும் போலீசார், சில தினங்களுக்கு முன் கண்டெடுத்தனர். ஆனால் குழந்தையின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணத்துக்கு அடுத்து நாள் குழந்தையின் தலையை, ஒரு வீட்டின் மொட்டை மாடியில் போலீசார் கண்டெடுத்தனர். கிரகணத்தின்போது குழந்தையை பலி கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது மனைவியின் உடல் நலம் சரியாக வேண்டும என்பதற்காக சந்திரகிரகணத்தன்று 3 மாத குழந்தையைக் கடத்தி, நரபலி கொடுத்ததாக டாக்ஸி ஓட்டுநர் கூறியுள்ளார். இது குறித்து ஐதராபாத் நகர போலீஸ் ஆணையர் மகேஷ் பகவத் கூறும்போது,
ஐதராபாத் உப்பல் சிலக்நகர் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் ராஜசேகர். இவரது மனைவி லலிதா. லலிதாவிற்கு சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் அவர் மாந்திரீகர்களை நாடியுள்ளார். அப்போது ஒருவர், சந்திரகிரகணம் அன்று பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்து, அதன் தலையை வீட்டில் வைத்து நிர்வாண பூஜை செய்து, பின்னர் அந்த தலையை வீட்டின் மீது கிரகண வெளிச்சம் படும்படி வைத்தால், உன் மனைவிக்கு பூரண உடல் நலம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சை கேட்ட ராஜசேகர், போயாகூடா பகுதியில் பிளாட்பாரம் மீது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தனது காரில் கடந்து வந்து, மூசி நதிக்கரையில் குழந்தையின் தலையை வெட்டி, உடலை அந்த நதியில் வீசியுள்ளார். ரத்தம் உறைந்த பின்னர், குழந்தையின் தலையை மட்டும் ஒருபையில் போட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
பின்னர், சந்திரகிரகணம் அன்று, வீட்டில் இவரும், இவரது மனைவியும் குழந்தையின் தலைக்கு முன்னே நிர்வாண பூஜை நடத்தியுள்ளனர். கிரகணம் வெளிச்சம்படும்படி, குழந்தையின் தலையை வீட்டின் மொட்டை மாடியில் வைத்துள்ளார். வீட்டில் படிந்த ரத்த கறைகளை ரசாயனங்களைக் கொண்டு கழுவியுள்ளார்.
மறுநாள் பிப்ரவரி 1 ஆம் தேதி ராஜசேகரின் அத்தை வீட்டுக்கு வந்துள்ளார். அவர், மாடி மீதுள்ள துணிகளைக் கொண்டுவர சென்றபோது, குழந்தையின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையின் தலையைக் கைப்பற்றிய போலீசார், குழந்தையின் ரத்த மாதிரியையும், வீட்டில் இருந்த சில ரத்த மாதிரிகளும் ஒன்றாக இருப்பதை அறிந்து ராஜசேகரை ரகசியமாக கண்காணித்து வந்தோம்.
ராஜசேகரின் செல்போன் எண்ணும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நரபலி குறித்து, போனில் பேசியது பதிவு செய்யப்பட்டது. பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு, ராஜசேகர்தான் கொலையாளி என தெரிந்த பின்னர், அவரையும், அவரது மனைவியையும் கைது செய்தோம். பலி கொடுக்கப்பட்ட குழந்தை யாருடையது என்பது இதுவரை தெரியவில்லை. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.