
ஹரியாணா மாநிலம் தனோடா கிராமத்தில் பெண் ஒருவர், தனது ஒன்பது மாத இரட்டை குழந்தைகளை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சதார் காவல் நிலைய விசாரணை அதிகாரி நர்வானா ஆத்மா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட ஷீத்தல் எனும் பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஷீத்தலின் கணவர் அளித்த புகாரை தொடர்ந்து, சம்பவம் நடந்து 13 நாட்களுக்கு பிறகே குற்றம் சாட்டப்பட்ட தாய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், ஜூலை 12ஆம் தேதி வயலில் வேலைக்குச் சென்றதாகவும், மதியம் வீட்டுக்கு வந்தபோது, தனது வீட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஜானகியும் ஜான்வியும் இறந்து விட்டதாக தனது மனைவி ஷீத்தல் கூறியதாகவும், அவரது பேச்சை நம்பி குழந்தைகளின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ததாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கணவர் அளித்த புகாரின் பேரில், 9 மாத இரட்டை குழந்தைகளை அவரது தாயே கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியில் எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹரியாணா மாநிலத்தில் தனது ஒன்பது மாத இரட்டை குழந்தைகளை அவர்களது தாயே தலையணையால் அழுத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.