
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி விமான நிலையம், சமீபத்திய பருவமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், அதன் கட்டுமான தரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் கனவுத் திட்டமாக ₹1,450 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சர்வதேச விமான நிலையத்தில், பெய்த கனமழை காரணமாக மேற்கூரையில் இருந்து தண்ணீர் கொட்டியது.
பிரதமர் நரேந்திர மோடியால் 2023 டிசம்பர் 30 அன்று திறந்து வைக்கப்பட்ட இந்த விமான நிலையம், நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் சிறந்த விமான நிலையம் கட்டப்படவில்லை என்றும், இங்கு வரும் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்றும் கட்டுமான நிறுவனங்கள் பெருமையாகக் கூறின. ஆனால், இரண்டு வருடங்களுக்குள்ளேயே இந்த பெருமைகள் கேள்விக்குறியாகியுள்ளது.
திங்கள்கிழமை நண்பகலில் கனமழை பெய்யத் தொடங்கியபோது, விமான நிலையத்தின் டெர்மினல் D-1 மற்றும் D-2 பிரிவுகளின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டியது. இதனால் பயணிகள் அடைக்கலம் தேடி ஓடினர். புறப்படும் பகுதியில் காத்திருந்த பயணிகளும், மேற்கூரையில் இருந்து சொட்டிக்கொண்டிருந்த தண்ணீரின் நடுவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி, விமான நிலையத்தின் கட்டுமானத்தின் தரம் குறித்து பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவசரமாகக் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டதால், தரத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.