இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லியில் 79 பேர், குஜராத்தில் 43 பேர், தெலங்கானாவில் 41பேர், கேரளாவில் 38 பேர் , கர்நாடகாவில் 31 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் 6 பேரும், ஹரியானா, ஒடிசா, ஆந்திராவில் தலா 4 பேரும், ஜம்மு -காஷ்மீரில் 3 பேரும் , உத்தரப்பிரதேசத்தில் 2 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் இதுவரை 106 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதேபோல் மஹாராஷ்டிராவில் 23 பேர், குஜராத்தில், 10 பேர், தமிழகத்தில் 12 பேர், தெலங்கானாவில் 10 பேர் என ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
undefined
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். வழக்கம் போல, இன்று 84-வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கேப்டன் வருண் சிங்கின் வாழ்க்கையை குறித்து பெருமிதமாக பேசினார்.
மேலும், "உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தற்போது நமது வீட்டு (இந்தியா) கதவையும் தட்டி விட்டது. ஒமைக்ரானை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த சர்வதேச பெருந்தொற்றை வீழ்த்த நாட்டுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது மிகவும் முக்கியம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டும்.
ஒமைக்ரானின் மாறுபாட்டை நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய தரவுகளை பெறுகிறார்கள். விஞ்ஞானிகளின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகின்றன. நமது கூட்டு சக்தி கொரோனாவை தோற்கடிக்கும். புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது கொரோனா வைரசை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் இன்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு கர்நாடகாவிலும் வரும் 28 ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமலாகவுள்ளது. அதன்படி வருகிற 28-ஆம் தேதி இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் கூட்டமாக ஒன்று சேர்வதை தடுக்கும் வகையில், சில புதிய கட்டுப்பாடுகளையும் கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி புத்தாண்டில் நடத்தப்படும் இரவு நேர இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ரெஸ்டாரெண்டுகள், கேளிக்கை விடுதிகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் அதிகளவில் பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் லாக் டவுன் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.