வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இ.கம்யூனிஸ்ட்... அங்கீகாரத்தை தக்கவைக்க தமிழகம் உதவுமா?

By Asianet TamilFirst Published May 22, 2019, 8:41 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன. அதன்படி இரு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றால், அந்தக் கட்சி தேசிய அங்கீகாரத்தைத் தக்கவைக்க பெரும் உதவியாக இருக்கும். 

தேசிய கட்சி அங்கீகாரத்தைத் தக்க வைக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு கட்சிகள் உள்ளன. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று. இக்கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டுமே வென்றது. தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள சதவீத வாக்குகளோ அல்லது தேர்தலில் பெறும் தொகுதிகளின் வெற்றியை வைத்துதான் அடுத்த தேர்தலில் குறிப்பிட்ட கட்சி மீண்டும் அந்தச் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கும். குறைவான வாக்கு சதவீதம் அல்லது வெற்றியை பெற்றாலோ அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிடும்.


தேசியக் கட்சி என்றால் மூன்று மாநிலங்களில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அதன் அங்கீகாரத்தைத் தொடர்ந்து தக்க வைக்க முடியும். போட்டியிடும் வேட்பாளர்களில் 3 சதவீதம் பேர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்தையும் பிடிக்கவில்லை. இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் கடும் சரிவை சந்திக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல வலுவாக உள்ள கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டாலும் வாக்கு சதவீதம் பெறுவதில் சிக்கல் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 
கடந்த காலங்களில் தமிழகத்தில் வலுவான கூட்டணியில் இடம்பிடித்து குறிப்பிட்ட வாக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுவந்தது. ஆனால், கடந்த நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலில் அது சாத்தியமில்லாமல் போனது. இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தைத் தாண்டி வெற்றியும் பெற வேண்டிய நிலையில் அக்கட்சி உள்ளது. தமிழகத்தில் திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டுள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன. அதன்படி இரு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றால், அந்தக் கட்சி தேசிய அங்கீகாரத்தைத் தக்கவைக்க பெரும் உதவியாக இருக்கும். தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில், பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் எதிர்காலமும் தெரியவரும்.

click me!