
5ஜி இன்டர்நெட் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும். அதற்குத் தேவையான அலைக்கற்றைகள் ஒதுக்குவதில் இந்த விதமான குறைவும் இல்லை. எனவே தாமதம் ஏற்படாது என்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.
5ஜி சேவைக்கு தயாராக இந்தியாவை மாற்றுவதற்குத் தேவையான அளவுக்கு, அலைக்கற்றைகள் கையிருப்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளார் மனோஜ் சின்ஹா. உலக நாடுகளுடன் போட்டியிடும் விதத்தில், 5ஜி வசதி இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் 5ஜி கொண்டுவருவது குறித்த கருத்தரங்கு ஒன்று தில்லியில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, உலகத் தரத்தில் தொலைத்தொடர்பு வசதிகளை உயர்த்தவும், 5ஜி வசதிக்குத் தயாராகவும் புதிய தொலைத்தொடர்புக் கொள்கை உருவாக்கப்படும் என்று கூறினார்.
மேலும் 5ஜி சேவையை வழங்குவதற்கு தேவையான அளவு அலைக்கற்றைகள் தாமதமில்லாமல் ஒதுக்கப்படும். உலகுடன் போட்டியிடும் வகையில் 5ஜி சேவையை இந்தியா உறுதி செய்யும்” என்று கூறினார் சின்ஹா.
3ஜி, 4ஜி அலைக்கற்றைகளை வைத்துக் கொண்டு, தற்போது இந்திய அரசு உலகின் மற்ற நாடுகளுடன் 5ஜி சேவைக்கு அலைமோதுகிறது. இந்த சேவை, அடுத்த தலைமுறை மொபைல் தொழில்நுட்பத்தை வழங்குகிறது. 5ஜி வசதியில் ஒரு நொடிக்கு 20ஜிபி என்கிற வேகத்தில் தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும். தற்போது 4ஜி சேவையில் நொடிக்கு 1 ஜிபி என்ற அளவில் பதிவிறக்க வேகம் உள்ளது.