கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன
பெங்களூருவில் உள்ள கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் இல்லத்தில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில், கடந்த ஆட்சி காலத்தில் பாஜகவுக்கு மாறி அமைச்சர்களான இரண்டு பேர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணையப் போவதாக ஊகங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த கூட்டத்தை தவிர்த்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் கலந்து கொள்ள இயலவில்லை என இருவருமே விளக்கம் அளித்துள்ளனர்.
எடியூரப்பாவின் பெங்களூரு இல்லத்தில் ஆளுங்கட்சியின் நிர்வாக சீர்கேடு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆட்சி காலத்தில் பாஜகவுக்கு மாறிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசேகர் மற்றும் பைரதி பசவராஜு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக ஊகங்கள் பரவி வரும் நிலையில், இந்த சம்பவம் அதனை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
undefined
ஆனால், அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக வெளியாகி வரும் தகவல்களை முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகிய இருவருமே மறுத்துள்ளனர். “எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரும் பாஜகவில் இருந்து விலகத் திட்டமிடவில்லை. ஓரிரு எம்எல்ஏக்கள் பல்வேறு காரணங்களுக்காக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஆனால் யாரும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.” என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஊகங்களை மறுத்துள்ள பசவராஜ் பொம்மை, கடந்த 2019ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, பின்னர் 2023ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களுக்கான கட்சியின் ஆதரவை உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
“எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன், சோமசேகர், பசவராஜு, கே கோபாலய்யா, சிவராம் ஹெப்பர், என் முனிரத்னா ஆகியோரிடமும் பேசினேன். அவர்கள் கட்சியை விட்டு விலக மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். கட்சிக்கு எதிராக கலகம் செய்யும் சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களின் பிரச்சினையை திசை திருப்பும் முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.” என்று குற்றம் சாட்டினார்.
வெளிநாடு சென்றிருந்த பைரதி பசவராஜு, நேராக தெலுங்கானா பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்று விட்டார். தனிப்பட்ட காரணங்களால் எஸ்.டி.சோமசேகர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்து மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் ஆனவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் இருக்கலாம் என ஒப்புக் கொண்டுள்ள பசவராஜ் பொம்மை, இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் காங்கிரஸில் இணையவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் என்.செலுவராயசாமி தெரிவித்தார். “காங்கிரஸில் சேரப்போகும் நபர்களின் பெயர்களை என்னால் தற்போது வெளியிட முடியாது” எனவும் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில், “வரும் தேர்தலில் காங்கிரஸின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று மட்டுமே கட்சியினரிடம் கூறியுள்ளேன். அதன்பொருட்டு, உள்ளூர் மட்டத்தில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். மற்ற தலைவர்களைப் பொறுத்தவரை எனது கவனத்துக்கு எதுவும் வரவில்லை.” என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்? மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கும் கே.எஸ்.அழகிரி!
மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை மறுத்துள்ள டி.கே.சிவக்குமார், இதுபோன்ற தகவலை தான் கேட்பது இதுவே முதல் முறை என்றும் கூறினார். “நீங்கள் (ஊடகங்கள்) எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை? மாநிலத்தில் உள்ள 223 எம்எல்ஏக்களுடன் எனக்கு அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்பு உள்ளது. நாங்கள் தொடர்பில் இருப்போம்.” என்றும் அவர் கூறினார்.
பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைவது குறித்த வதந்திகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, “எம்எல்ஏக்கள் உட்பட சில பாஜக தலைவர்கள் காங்கிரஸில் சேரத் தயாராக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால், எங்கள் மாநில தலைவரை அவர்கள் தொடர்பு கொண்டிருக்கலாம். எங்கள் சித்தாந்தம் மற்றும் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் சேரும் அனைவரையும் வரவேற்போம்.” என்றார்.
அதேசமயம், அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மை குறித்து பாஜகவினர் வதந்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டிய அவர், அதில் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். அரசு உறுதியுடன் செயல்படுவதால்தான் பாஜக தலைவர்கள் காங்கிரஸில் சேர தயாராக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், யாரும் காங்கிரஸுக்கு செல்லப் போவதில்லை என்று முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ளார். “பாஜகவை விட்டு யாரும் காங்கிரஸில் சேர மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் அரசால் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஏன் பாஜகவை விட்டு வெளியேறப் போகிறார்கள்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவில் இருந்து காங்கிரசில் இணையும் நபர்கள் பற்றி எவ்வித தெளிவும் இல்லை அவை வெறும் ஊகங்களே எனவும் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் அரசின் ஊழல்களுக்கு எதிராக ஆகஸ்ட் 23ஆம் தேதி மாநில பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் 5,000 முதல் 6,000 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக பெங்களூருவில் உள்ள வார்டு வரம்புகளை மாற்றியமைக்கும் அரசின் தன்னிச்சையான முடிவுகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
எடியூரப்பா இல்லத்தில் நடைபெற்ற பாஜக கூட்டம் இரண்டு மணி நேரம் நீடித்தது. அப்போது பாஜக போராட்டம் குறித்தும், மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் இருந்து யாரும் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.