சென்னையாகிறதா பெங்களூரு? டிகே சிவக்குமாரின் அதிரடி நடவடிக்கை!!

By Manikanda PrabuFirst Published Jun 9, 2023, 6:41 PM IST
Highlights

பெங்களூருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆய்வு செய்தார்

பெங்களூருவில் உள்ள மழைநீர் வடிகால், ஏரியை தூர்வாரும் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு  உள்கட்டமைப்பு பணிகளை கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பெங்களூருவில் தற்போது 890 மழைநீர் வடிகால்கள் உள்ளதாகவும், அவற்றில் முக்கியமான சிலவற்றை ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். திட்டப்பணிகளை கனிணியில் பார்த்து பரிசீலனை செய்பவன் தாம் இல்லை எனவும், நிலைமையை நேரடியாக பார்க்க விரும்புவதாகவும், பெங்களூருவின் வளர்ச்சியே தமக்கு முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பெங்களூரு மழையால் ஏற்பட்ட பெரும் இழப்பை மனதில் வைத்து, நகரின் முக்கிய தகவல் தொழில்நுட்ப பகுதிகளான ஏமலூர், சர்ஜாபூர், கஞ்சூர் ஆகிய இடங்களில் உள்ள மழைநீர் வடிகால் அமைப்பை சிவக்குமார் ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ளம் அந்நகரை புரட்டி போட்டது. சாலைகள் வெள்ளக்காடாக மிதந்தன. முந்தைய ஆட்சியில் சரி வர செய்யப்படாத மழைநீர் விடிகால் பணிகளே மழை நீர் தேங்கக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. நாட்டின் ஐடி தலைநகராக இருக்கும் பெங்களூருவில் பெய்த கனமழையால், பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேறு மாநிலத்துக்கு மாறி விடும் திட்டத்தை கையில் எடுத்தன, சில நிறுவனங்கள் பெங்களூருவை தங்கள் சாய்ஸில் இருந்து நீக்கின.

அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்த விஷயங்களில் ஒன்றாக பெங்களூரு கனமழை வெள்ளம் பார்க்கப்படுகிறது. பாஜக தோல்வியடைந்து தற்போது காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது. சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளனர். நீர்ப்பாசனம் மற்றும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆகிய துறைகள் டிகே சிவக்குமார் வசம் உள்ளன.

துணை முதல்வராக பொறுப்பேற்று, துறைகள் கைக்கு வந்ததுமே அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார் டிகே சிவக்குமார். அவரது நடவடிக்கைகள் அப்படியே தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை நினைவுபடுத்தும் வகையில் உள்ளதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற தருணம் மிகவும் கடினமாக இருந்தது. கொரோனா, மழைநீர் வடிகால் பணிகள் என அவர் முன்னிருந்த சவால்கள் ஏராளம்.

ஆனால், தொடர்ச்சியாக களத்தில் இறங்கினார் ஸ்டாலின். அரசு இயந்திரம் வேகமெடுத்தது. சென்னை சாலைகளில் நின்ற அவர், மறுநாள் டெல்டா பயிர்களுக்கிடையே நின்றார். அடுத்தநாள் கன்னியாகுமரியில் இருப்பார். கோவைக்கும் செல்வார். நெல்லையில் இருக்கும்போது, சென்னையில் மழை பெய்தால், உடனடியாக நள்ளிரவில் சென்னைக்கு திரும்பி ஆய்வில் ஈடுபடுவார். அவரது வேகத்துக்கு அரசு அதிகாரிகளும் ஈடுகொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மத்திய அமைச்சரவை மாற்றம்? பாஜகவின் அதிரடி திட்டம்!

ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த சில மாதங்களில் பருவமழை பெய்தது. சென்னை வெள்ளக்காடானது. ஆனாலும், மழை நீரினை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. கனமழை பொழிய ஆரம்பித்ததில் இருந்தே, பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நாள்தோறும் நேரடியாக ஆய்வு செய்தார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் மழை நீர் வடிகால்வாய் சரிவரத் தூர்வாரப்படவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின், மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான நிரந்த தீர்வு காணும் வழிகளை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு பருவமழையின்போது, சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. இதற்கு ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளே காரணம் என புகழாரம் சூட்டப்பட்டது.

அந்த வகையில், பெங்களூரு மழை கர்நாடக அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்டியுள்ளதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டின் பாணியை குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் பாணியை கையில் எடுத்து தொடர் ஆய்வுகள் மூலம், சென்னையை போலவே பெங்களூருவிலும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

click me!