மெனோபாஸ் கொள்கை உருவாக்குவதற்கு முன் கலந்தாலோசிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்!

By Manikanda PrabuFirst Published Dec 8, 2023, 6:38 PM IST
Highlights

மெனோபாஸ் கொள்கை உருவாக்குவதற்குமுன் கலந்தாலோசிக்கப்படும் என ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், “அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் கொள்கையை அறிமுகப்படுத்த அமைச்சகம் பரிசீலித்து வருகிறதா?; அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?; அத்தகைய கொள்கையை அடுத்த ஆண்டுக்குள் வெளியிட அமைச்சகத்திடம் திட்டம் ஏதும் உள்ளதா; அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையெனில், அது எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தைத் தருக?; மெனோபாஸ் போன்ற பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி.  ரவிக்குமார் மக்களவையில் எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மெனோபாஸ் ( மாதவிடாய் நிறுத்தம் )  என்பது பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் ஏற்படும் முதுமையோடுகூடிய  இயல்பான விளைவாகும். எந்த அடிப்படை காரணமும் இல்லாமல் ஒரு வருடத்திற்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது. சில பெண்களுக்கு லேசான பிரச்சனைகள் ஏற்படும் அல்லது சிலருக்கு எதுவும் இருக்காது, ஆனால் சில பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் கடுமையான அறிகுறிகள் இருக்கும். மாதவிடாய் நின்ற பிற்பகுதியில் மேலும் பல ஆண்டுகளை கழிக்கும் பெண்களின் வாழ்வில் இது தவிர்க்க முடியாத நிகழ்வாகும்.

Latest Videos

தேசிய சுகாதாரத் திட்டம் (NHM) மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய, மலிவான, தரமான சுகாதார சேவைகளை அனைவருக்கும் வழங்க எண்ணுகிறது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸ் கொள்கை எதுவும் இதுவரை வகுக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நிறுத்தக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக முடிவு செய்வதற்கு  முன், அது தொடர்பான அனைத்துத் தரப்பினரையும்  கலந்தாலோசிக்கப்படும். இந்த விஷயத்தின் அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலித்து, மாதவிடாய் நிறுத்தத்தின் விளைவாக பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல், மன அழுத்தம் தொடர்பாக உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் தேவைப்படுகின்றன.

1465 வழித்தட கி.மீ., 139 ரயில் என்ஜின்களில் கவாச் அமைப்பு: மத்திய அமைச்சர் தகவல்!

மேலும், மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் போன்ற பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்த தெளிவை உண்டாக்க வேண்டிய தேவை உள்ளது.  இந்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் விளம்பரங்கள் / வீதி நாடகம் போன்றவற்றின் மூலமாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், “26.11.2019 அன்று முதன் முதலாக இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துப் பேசினேன். 06.12.2019 அன்று இந்தப் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினேன். அப்போது என்ன பதிலைக் கொடுத்தார்களோ அதே பதிலை ஒரு வார்த்தைகூட மாறாமல் இப்போதும் கொடுத்திருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.

click me!