
வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை யானை ஒன்று தாக்கி அப்புறப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு என்பதற்கு இது ஒரு சான்று என வீடியோவை பதிவிட்ட வனத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள 28 வினாடி வீடியோவில், அடர்ந்த காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கேமராவைத் தொலைதூரத்தில் இருந்தே யானை கவனித்துவிடுகிறது. அது ஏதோ செயற்கையான பொருள் என்பதை உணர்ந்த அந்த யானை, வேகமாக ஓடி வந்து கேமராவைத் தாக்கி கீழே தள்ளுகிறது. கேமரா கீழே விழுந்தவுடன், தனது இலக்கை முடித்துவிட்ட திருப்தியுடன் அந்த யானை அமைதியாக அங்கிருந்து நடந்து செல்கிறது.
இது குறித்து பதிவிட்டுள்ள பர்வீன் கஸ்வான், "தனியுரிமை (Privacy) என்பது அனைவருக்கும் முக்கியம்! அந்தப் பகுதியில் ஏதோ ஒன்று இயற்கைக்கு மாறாக (கேமரா) இருப்பதை உணர்ந்த யானை உடனே அதை அகற்றிவிட முடிவு செய்துவிட்டது. என்னவொரு புத்திசாலித்தனம்!" என்று வியந்துள்ளார்.
வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விடத்தை ஆய்வு செய்ய 'IR' மற்றும் 'White Flash' வகை கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
தற்போது அந்தத் தேசியப் பூங்காவில் சுமார் 210 கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. யானையின் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், அந்த அதிநவீன கேமரா சேதமடையாமல் தப்பித்துள்ளது. அதில் பதிவான காட்சிகளே தற்போது வெளியாகியுள்ளன.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் யானையின் அறிவாற்றலைப் பாராட்டி வருகின்றனர்.
"யானைகள் எப்போதும் தங்கள் புத்திசாலித்தனத்தால் நம்மை வியக்க வைக்கின்றன" என்றும், "கேமராவில் இருந்து வெளிவரும் வெள்ளை நிற வெளிச்சம் (Flash) யானைக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்" என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது அந்தத் தேசியப் பூங்காவில் சுமார் 20,000 ஹெக்டேர் பரப்பளவைக் கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப உதவிகளுடன் வனத்துறையினர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.