
நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிறுவனங்கள், விமானங்களின் பராமரிப்புப் பணிகள் மற்றும் விமான நிலையங்கள் தொடர்பாக பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. முக்கிய விமான நிலையங்களில் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருப்பது தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மேலெழும்பிய சில நொடிகளில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகம் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. 270 பேரின் உயிரைப் பலிகொண்ட இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் டிஜிசிஏ தரப்பில் விரிவான ஆய்வு தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் விமான நிறுவன செயல்பாடுகள் மற்றும் விமானப் பராமரிப்புப் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
குறைபாடுகளைக் கண்டறிந்த இரு குழுக்கள்:
நாட்டின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கிலான இந்த ஆய்வில் இணை தலைமை இயக்குநர் தலைமையிலான இரு குழுக்கள் ஈடுபட்டன. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான இயக்கங்கள், விமானங்களின் தகுதி, விமான நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு இடங்களின் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு-வழிசெலுத்துதல்-கண்காணிப்பு அமைப்புமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக காலை, இரவு நேரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட முக்கிய குறைபாடுகள்:
7 நாட்களுக்குள் சரி செய்ய அறிவுறுத்தல்:
முக்கிய விமான நிலையங்களில் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது, இது போதிய கண்காணிப்பின்மை மற்றும் தவறுகளைத் திருத்தும் முயற்சியின்மையை வெளிப்படுத்துகிறது என்றும் டிஜிசிஏ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து குறைபாடுகளும் 7 நாட்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும் என்று விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பில் உள்ள சில குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இந்த குறைபாடுகள் விரைந்து சரி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது