
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் நடந்ததாக கூறப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் தொலைத்தொடர்பு துறைஅமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். கடந்த 6½ ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் உண்மையான ‘2ஜி யானை’ யார் என்பதை நேற்ற நீதிமன்றம் வௌியிட்டு தெளிவு படுத்தியுள்ளது.
2ஜியானை என்பது, ஆ.ராசா தனது இறுதிக்கட்ட வாதத்தின்போது, நீதிமன்றத்தில் கூறப்பட்ட கதையாகும். அந்த கதையில்தான் 2ஜியானை குறித்து கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நடந்த இறுதிக்கட்ட வாதத்தின்போது, ஆ.ராசா கூறிய 2ஜியானையும், பார்வையற்றவர்களும் என்ற கதையின் விவரம்-
நான்கு பார்வையில்லாதவர்கள் யானையை தொட்டுப்பார்த்து, எப்படி இருந்தது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஒருவர் யானையின் காதைத் தொட்டுப்பார்த்து துண்டுதுண்டாக நறுக்கும் எந்திரம் போல் பெரிதாக இருந்தது என்றார். மற்றொருவர் தொட்டுப்பார்த்து, யானை சுவர் போல் இருந்தது என்றார். 3-வது நபர் யானையின் தந்தத்தை தொட்டுப்பார்த்து, தூண்போன்று இருந்தது என்றார். கடைசி நபர் யானையின் வாலைப் பிடித்துப் பார்த்து யானை மிகப்பெரிய கயிறுபோன்று இருந்தது என்று பேசிக்கொண்டனர்.
இதைபோலத்தான் மத்திய ஊழல் கண்காணிப்பு பிரிவு(சி.வி.சி.), மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலர்(சி.ஏ.ஜி.), நாடாளுமன்ற கூட்டுக்குழு(ஜே.பி.சி.), சி.பி.ஐ. ஆகியோர் 2ஜி எனும் யானையை தொட்டுப்பார்த்து தவறாக அர்த்தம் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் புரிந்து கொண்டதற்கு ஏற்ப சொந்தமாக அறிக்கை விட்டுள்ளனர். இந்த வழக்கு முற்றிலும் எனக்கு எதிராக திணிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கைவிசாரணை செய்த அனைத்து அமைப்புகளும் 2ஜி. வழக்கை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். தொலைத்தொடர்பு துறையின் விதிமுறை மீறல்கள் ஏதும் நடக்கவில்லை’’ என்றார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஓ.பி. ஷைனி அளித்த தீர்ப்பில், “ 2ஜி வழக்கின் விசாரணை செய்த சி.பி.ஐ. அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகை தவறான அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகள் குறித்தும், தீவிரமாக ஆய்வு செய்யப்படாமலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரை விடுவித்து தீர்ப்பளித்தார். இதன் மூலம் உண்மையான 2ஜி யானை எது?, யார் என்பதை நீதிபதி வெளிப்படுத்திவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சி முதன்முதலாக சந்தித்த மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு 2ஜி ஸ்பெக்ட்ராம் ஆகும். மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.