
பாகிஸ்தானுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பிரதமர் மோடி அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
நாடாளுமன்றம் முடக்கம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்புப்படுத்தி காங்கிரஸ் பாகிஸ்தானுடன் இணைந்து சதிதிட்டம் தீட்டுகிறது என பிரதமர் மோடி குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது பெரும் சர்ச்சையாகியது.
இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் இவ்விவகாரத்தை எழுப்பி கடும் அமளியை ஏற்படுத்துவதால் நாடாளுமன்றம் முடங்கும் நிலை நீடிக்கிறது.
குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் இப்பிரச்சனையை எழுப்பிய போது மன்மோகன் சிங் தொடர்பான பிரதமர் மோடி பேச்சுக்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என வெங்கையா நாயுடு கூறிவிட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானுடன் சதிதிட்டம் தீட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் அரசியலமைப்பை மீறுகிறார் என காங்கிரஸ் சாடி உள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே
நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘‘பிரதமர் மோடி தேசத்தை பிரிக்கிறார் மற்றும் நல்ல மனிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே ரகசியமாக கூட்டம் நடைபெற்றது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தகவல் கிடைத்து இருந்தால், அதனை முறியடிக்க பிரதமர் மோடி உளவுத்துறை மற்றும் பிற விசாரணை முகமைகளை பயன்படுத்தாது ஏன்.?
களங்கம்
உங்களிடம் உண்மையான ஆதாரம் இருந்தால், எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கைது செய்ய வேண்டும். அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டீர்கள், அவருடைய தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்பிவிட்டீர்கள்.
கூட்டத்தில் தேசவிரோதமாக ஏதேனும் நடந்து இருந்தால் பிரதமர் மோடி விசாரணை முகமைகளை கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது பிரதமர் மோடி பதவி ஏற்றபோது செய்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறுவதாகும்.
அரசியல் அமைப்பை...
பாகிஸ்தானுடன் இணைந்து சதிதிட்டம் தீட்டியதற்கு பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டம் மற்றும் பிரதம அலுவலகத்தின் கண்ணியத்தை மீறிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.