அடுத்த டெல்லி முதல்வர் யார்? அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பின் பின்னணி என்ன?

By SG BalanFirst Published Sep 15, 2024, 2:40 PM IST
Highlights

தலைநகர் டெல்லியின் அடுத்த முதல்வராகப்போவது யார்? அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் பதவிக்கான ரேஸில் இருப்பவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் இரண்டு நாட்களில் தான் ராஜினாமா செய்வதாகவும், மக்கள் தனக்கு நேர்மைக்கான சான்றிதழை வழங்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார். டெல்லியில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளிவந்தார். வெளியே வந்த பிறகு பேசிய அவர், “மக்கள் என் நேர்மைக்கான சான்றிதழை வழங்கிய பிறகே முதல்வர் நாற்காலியில் அமருவேன்" என்று கூறினார்.

Latest Videos

"ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் 'அக்னிபரிட்சை' மேற்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் நேர்மையானவர்கள் என்று மக்கள் கூறினால்தான் நான் முதல்வராகவும், மனீஷ் சிசோடியா துணை முதல்வராகவும் பதவியேற்போம்" என அவர் குறிப்பிட்டார். பிப்ரவரி 2025க்கு பதிலாக நவம்பர் 2024-ல் டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடப்பதால், அதனுடன் சேர்த்தே டெல்லி தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரொம்ப கெடுபிடி இல்லாமல் அதிக வட்டி கொடுக்கும் ஏர்டெல் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டம்!

ரொம்ப கெடுபிடி இல்லாமல் அதிக வட்டி கொடுக்கும் ஏர்டெல் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டம்!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கும் கெஜ்ரிவால், அடுத்த ஓரிரு நாட்களில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் அடுத்த முதல்வர் யார் என்று தேர்வு செய்யப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் அடுத்த முதல்வராகப்போவது யார்? அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு முதல்வர் பதவி வழங்கப்படுமா? அல்லது ஆத் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைக்குமா? அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் பதவிக்கான ரேஸில் இருப்பவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

அதிஷி:

அதிஷி 2020 இல் டெல்லி சட்டசபைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நகரின் பள்ளிகள் மற்றும் கல்வி முறையை மேம்படுத்துவதில் மனீஷ் சிசோடியாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஆம் ஆத்மியின் பிரபலமான தலைவர்களில் இவரும் ஒருவர்.

சிசோடியாவின் ஆலோசகராக டெல்லியின் கல்வி முறை மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டது கவனம் பெற்றது. டெல்லி சட்டசபையின் கல்விக்கான நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற அதிஷி, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தார். தற்போது டெல்லியின் அமைச்சராக இருக்கும் இவர், கல்வி, உயர்கல்வி, TTE, நிதி, திட்டமிடல், PWD, நீர், மின்சாரம், சேவைகள், விஜிலென்ஸ் மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஆகிய இலாகாகளை தன்வசம் வைத்துள்ளார்.

சௌரப் பரத்வாஜ்:

டெல்லியின் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் முதல்வராகும் வாய்ப்புள்ள மற்றொரு ஆம் ஆத்மி தலைவர். 49 நாள் மட்டும் நீடித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியின்போது பரத்வாஜ் முதன்முதலில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு உணவுத்துறை, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் பொது நிர்வாகம் உட்பட பல முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், கெஜ்ரிவால் தலைமையில் நடந்த போராட்டத்தால் அந்த அரசு கவிழ்ந்தது.

2015 சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி மீண்டும் வென்றபோது, பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வெற்றி பெற்றார். 2013இல் பாரதிய ஜனதா கட்சியின் அஜய் குமார் மல்ஹோத்ராவை தோற்கடித்த அவர், 2015இல் பாஜகவின் ராகேஷ் குமார் குல்லையாவை எதிர்த்து வெற்றி பெற்றார்.

ஆம் ஆத்மியில் சேர்வதற்கு முன்பு குர்கானில் உள்ள ஜான்சன் கன்ட்ரோல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பரத்வாஜ் முன்பு இன்வென்சிஸில் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்துள்ளார். இப்போதும் ஹைதராபாத்தில் உள்ள ஷ்னீடர் எலக்ட்ரிக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.

கோபால் ராய்:

கோபால் ராய் தற்போது சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, வளர்ச்சி மற்றும் பொது நிர்வாகத் துறை அமைச்சராக உள்ளார். கேபினட் அமைச்சரான கோபால் ராய் லக்னோ பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். லக்னோவில் மாணவர் தலைவராக கல்லூரி வளாகங்களில் குற்றச் செயல்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஒருமுறை பிரச்சாரத்தின்போது கையில் சுடப்பட்டு காயம் அடைந்தார்.

கைலாஷ் கெலாட்:

தற்போது சட்டம், நீதி மற்றும் சட்டமன்ற விவகாரங்கள், போக்குவரத்து, நிர்வாக சீர்திருத்தங்கள், தகவல் தொழில்நுட்பம், வருவாய், நிதி, திட்டமிடல் ஆகிய துறைகளின் அமைச்சராக இருப்பவர் கைலாஷ் கெலாட். இவரும் முதல்வராக வாய்ப்பு உள்ளது.

333 நாளுக்கு முதலீடு செய்தால் ரூ. 1 லட்சம்... புதிய திட்டத்தை கொண்டு வந்த அரசு வங்கி!

click me!