பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்.! குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

By Ajmal KhanFirst Published Jun 24, 2022, 9:42 AM IST
Highlights

பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மாநில கட்சிகள் திரவுபதி முர்முக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல்

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் குடியரசு தலைவர் வேட்பாளர்களை தேர்வு செய்ய பாஜக மற்றும் எதிர்கட்சிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க. தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். எதிர்கட்சிகள் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர்  யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பாய்டாபோசி கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தவர், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுனராகவும் செயல்பட்டுள்ளார். குடியரசு தலைவர் வேட்பாளராக பழங்குடியினர் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் மேலும் குடியரசு தலைவராக தேர்நெதெடுக்கும் பட்சத்தில் குடியரசு தலைவர் மாளிகையை அலங்கரிக்க இருக்கும் இரண்டாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெற்றியின் அருகில் திரவுபதி முர்மு
 
இந்தநிலையில் இன்று பாஜக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.  ஜூலை 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும். குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பாளர்கள். பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. இந்தநிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒடிசா மாநிலம் சார்பாக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல மாநில கட்சிகளும் திரவுபதி முர்முக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் ஓபிஎஸ் பங்கேற்பு

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை திரவுபதி முர்மு இன்று தாக்கல் செய்யவுள்ளார். நண்பகல் 12:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில்  பாஜக தனது கூட்டணி மற்றும்  திரவுபதி முர்முக்கு ஆதரவு தெரிவித்துள்ள மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வமும், தம்பிதுரையும் பங்கேற்கவுள்ளனர். இதே போல ஒடிசா மற்றும் பல்வேறு மாநில கட்சிகளும் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கலின் போது கலந்து கொள்ள உள்ளன. 

இதையும் படியுங்கள்

பழங்குடியினருக்கு என்ன செய்தார் திரெளபதி முர்மு.? அவர் பாதுகாவலர் ஆயிடுவாரா.? யஷ்வந்த் சின்ஹா ஆட்டம் ஆரம்பம்!

click me!