அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள கோத்தாரி சகோதரர்களின் சகோதரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கோத்தாரி சகோதரர்களின் சகோதரி அழைக்கப்பட்டுள்ளார். ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, கோத்தாரி சகோதரர்களின் சகோதரியை ஜனவரி 22ஆம் தேதி கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கு அழைத்துள்ளது. அழைப்பைப் பெற்றுக் கொண்ட பூர்ணிமா கோத்தாரி, பாபர் மசூதியில் காவிக்கொடியை முதலில் ஏற்றியவர்களில் தனது சகோதரர்களும் அடங்குவர் என்று கூறினார்.
மேலும், தனது சகோதரர்களிம்ன் தியாகத்திற்கு நீதி கிடைத்து வருவதாகவும், ராம ஜென்மபூமி இயக்கத்தில் அவர்கள் செய்த பங்களிப்பிற்காக தனது சகோதரர்களின் பெயர்கள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் பூர்ணிமா கோத்தாரி கூறினார். “எனது சகோதரர்கள் ராம் கோத்தாரி மற்றும் ஷரத் கோத்தாரி ஆகியோர் தங்கள் தியாகத்திற்கு நியாயம் கிடைப்பதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கும். அதனால் அவர்களின் பெயர்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். இதனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று பூர்ணிமா கோத்தாரி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சீதைக்கு 196 அடி பிரம்மாண்டமான சேலை!
யார் இந்த கோத்தாரி சகோதரர்கள்?
ராம் கோத்தாரி (22), ஷரத் கோத்தாரி (20) ஆகியோர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்தவர்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) உறுப்பினர்களான சகோதரர்கள் இருவரும், கரசேவைக்கு விஎச்பி அழைப்பு விடுத்ததையடுத்து, ராம ஜென்மபூமி இயக்கத்தில் சேர்ந்தனர். 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி கரசேவகர்களின் பெரும் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
கோத்தாரி சகோதரர்கள் இருவரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களாக இருந்தனர். 1990ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று சுமார் 60 கரசேவகர்களுக்கு தலைமை தாங்கி அவர்களை அயோத்திக்கு கோத்தாரி சகோதரர்கள் அழைத்து சென்றனர்.
கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட அவர்களது குழு வாரணாசியில் நிறுத்தப்பட்டது. அவர்கள் சென்ற ரயில் மேலும் செல்ல தடை விதிக்கப்பட்டது, எனவே அவர்கள் ஒரு டாக்ஸியில் கோலாபூருக்கு சென்றனர். அங்கிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரம் நடந்து அயோத்தியை அவர்கள் அடைந்தனர். உள்ளூர் காவல்துறையினருடன் தொடர்ச்சியான வாக்குவாதத்திற்குப் பிறகு அக்டோபர் 30 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவர்களது குழு இலக்கை அடைந்தது.
அங்கு போலீசாரின் தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை அக்கும்பல் எதிர்கொண்டது. பாபர் மசூதி வளாகத்துக்குள் முதன்முதலாக நுழைந்து கோத்தாரி சகோதரர்களின் கும்பல், அங்கு காவிக்கொடியை ஏற்றியது வரலாற்றில் இடம்பிடித்தது. தொடர்ந்து, நவம்பர் 2 ஆம் தேதி பைசாபாத்தில் இருந்து அயோத்திக்குத் திரும்பிய கோத்தாரி சகோதரர்கள் அயோத்தியில் பொது ஒழுங்கிற்கு இடையூறு விளைவித்ததாக கூறி அரசு நிர்வாகத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அயோத்தியில் அவர்கள் இறந்த பாதை ஷாஹித் மார்க் என்று அழைக்கப்பட்டது. ராமர் கோவிலுக்கு மிக அருகில் உள்ள ஹனுமான் கர்ஹி கோவிலுக்கு அருகில் உள்ள அப்பாதையில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
“கடந்த 33 வருடங்களில் இதுவே முதல் மகிழ்ச்சி. என் சகோதரர்களின் தியாகத்திற்குப் பிறகு நாம் 33 வருடங்கள் காத்திருந்தோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பிரமாண்ட ராமர் கோவிலை நம் கண் முன்னே பார்க்க முடிகிறது. ஆனால் சில சமயங்களில் நம்பிக்கையை இழந்து விட்டேன். ராமர் கோயிலை பார்க்கவே முடியாது என்று நினைத்தேன். இப்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எனது சகோதரர்களின் தியாகத்துக்கு இன்று உரிய மரியாதை கிடைத்து வருகிறது.” என கோத்தாரி சகோதரர்களின் சகோதரி பூர்ணிமா கோத்தாரி தெரிவித்துள்ளார்.