தமிழில் பேசினால் மட்டுமே பணியும் அரிய ‘வெள்ளைப் புலி’...!!!

First Published Oct 24, 2016, 4:27 AM IST
Highlights


தமிழில் பேசி, கட்டளையிட்டால் மட்டுமே புரிந்துகொள்ளும் வெள்ளைப் புலியால், ராஜஸ்தான் மாநில வனவிலங்கு காப்பக அதிகாரிகள் தலைமுடியை பிய்த்துக்கொண்டு திணறி வருகின்றனர். 

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆண் வெள்ளைப்புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் ஷாஜங்கார்க் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் வெள்ளைப் புலியோடு இணை சேர்ப்பதற்காக பரிமாற்ற அடிப்படையில் கடந்த மாதம் வண்டலூரில் இருந்து ‘ராமா’ என்ற ஆண் வெள்ளைப்புலி அங்கு மாற்றம் செய்யப்பட்டது. 

அதற்கு பதிலாக உதய்ப்பூரில் இருந்து 2 இந்திய ஓநாய்கள் வண்டலூருக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்த ராமா வெள்ளைப்புலி டெல்லியில் உள்ள உயிரியில் பூங்காவில் பிறந்திருந்தாலும், குட்டியில் இருந்து வண்டலூரில்தான் வளர்க்கப்பட்டது. 

இந்த ராமா வெள்ளைப்புலி வளர்க்கப்படும்போது, தமிழில் பேசியே கட்டளை பிறப்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இதனால், தமிழில் பேசினால் மட்டுமே ராமா புலிக்கு புரியும். ஆனால், உதய்பூருருக்கு கொண்டு சென்றதில் இருந்து இந்த ராமா புலியிடம் இந்தியில் கட்டளையிட்டு அங்குள்ள பணியாளர்கள் பேசி வருகிறார்கள். அந் மொழி  ராமா புலிக்கு புரியவில்லை. இதனால், அங்குள்ள ஊழியர்களின் வார்த்தைக்கு கட்டுப்படாமல் உறுமுகிறது.

இதனால், ராமா புலி அருகே செல்ல முடியாமல் உதய்பூர் வன உயிரியல் பூங்கா பணியாளர்கள் திணறி வருகின்றனர். கடந்த 3 வாரங்களுக்குப் பின், நேற்றுமுன்தினம் தான் முதல்முறையாக பார்வையாளர்களுக்கு வெள்ளைப்புலி திறந்துவிடப்பட்டது என்ற போதிலும், இந்தியில் கட்டளையிட்டால் சட்டை செய்யாமல் இருக்கிறது. 

இது குறித்து வண்டலூரில் ராமா வெள்ளைப்புலியை வளர்த்த ஊழியர் செல்லையாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “ குட்டியில் இருந்தே இந்த ராமா வெள்ளைப்புலியை நான்தான் வளர்த்து வந்தேன். இதற்கு தமிழில் ‘இங்கே வா’, ‘அங்கே போ’, ‘சாப்பிடு’ என தமிழில் பேசியே பழக்கியிருந்தேன். இப்போது உதய்ப்பூர் சென்றதில் இருந்து ராமா புலி சாப்பிட மறுக்கிறது, கட்டளைக்கு பணிய மறுக்கிறது என்று தகவல் அறிந்தோம். இப்போது புலியை பாதுகாத்து வரும் உதய்ப்பூர் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சியை அளிப்போம்'' என்று தெரிவித்தார்.

உதய்ப்பூர் உயிரியல் பூங்கா ஊழியரும், ராமா புலியை பாதுகாப்பவருமான ராமன்சிங் கூறுகையில், “ இந்தியில் பேசினால் ராமா வெள்ளைப்புலி கட்டளைக்கு பணிய மறுக்கிறது. ஆனால், தமிழில் வா , போ என்றால் பணிகிறது. விரைவில் நான் இந்திக்கு புலியை பழக்கிவிடுவேன்'' என்று தெரிவித்தார்.

click me!