காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில், ஏறக்குறைய திவாலா நிலையில் இருந்த பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சமீபகாலமாக வரலாறு காணாத சாதனைகளைச் செய்திருக்கிறது மோடி அரசு என்று அது ஆதாரங்களுடன் கூறியிருக்கிறது.
பொருளாதார ரீதியாகத் தனது 10-ஆண்டு கால ஆட்சியையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டு கடந்த வாரம் மோடி அரசு ‘வெள்ளை அறிக்கை’ ஒன்றை வெளியிட்டது. காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில், ஏறக்குறைய திவாலா நிலையில் இருந்த பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சமீபகாலமாக வரலாறு காணாத சாதனைகளைச் செய்திருக்கிறது மோடி அரசு என்று அது ஆதாரங்களுடன் கூறியிருக்கிறது. அதை எதிர்த்து ‘கருப்பு அறிக்கை’ ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் தனது முடிவில், 2014-ல் பொருளாதாரம் திவாலா நிலையில் இருந்ததையோ, மோடி ஆட்சியில் அதன் வளர்ச்சியையோ மறுக்கவில்லை. அதில் மோடி மீது குற்றச்சாட்டுகளைத் தவிர, வேறு எதுவும் இருப்பதாகத் தகவல் இல்லை.
மறுக்க முடியாத உண்மைகள்
undefined
மோடி அரசின் வெள்ளை அறிக்கை, மூன்று முக்கிய உண்மைகளைக் கூறுகிறது. அதை காங்கிரஸின் கருப்பு அறிக்கை மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது. ஒன்று - வாஜ்பாய் அரசு தனது 6 ஆண்டு கால ஆட்சி முடிவில் - அதாவது 2004-ல், “நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலையில் விட்டுச் சென்றது” என்று தனது முதல் (2004-05) பட்ஜெட்டில், காங்கிரஸ் கூட்டணி அரசே பாராட்டியது. இதைக் கருப்பு அறிக்கை மறுக்கவில்லை. இரண்டு - 10-ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், தவறான கொள்கைகள் மற்றும் பிரமாண்டமான ஊழல்களின் காரணமாக, பாரதப் பொருளாதாரம் படுபாதாளத்தில் விழுந்தது. அதனால் ‘நொறுங்கும் நிலையில் இருக்கும் ஐந்து உலகப் பொருளாதாரங்களில் ஒன்று பாரதம்’ என்று 2013-ல் பிரபல உலக நிதி அமைப்புகள் கூறும் பரிதாபமான நிலையில் விட்டுச் சென்றது காங்கிரஸ் ஆட்சி. இதையும் கருப்பு அறிக்கை மறுக்கவில்லை. மூன்று - 10-ஆண்டு கால மோடி ஆட்சியில் கொரோனா தொற்று நோய், உக்ரைன் போர் போன்ற கடும் பிரச்னைகளை மீறி, உலகப் பொருளாதாரத்தில் 10-ஆம் இடத்தில் நொண்டிக் கொண்டிருந்த நம் பொருளாதாரம் பிரமாண்டமாக வளர்ந்து, உலகில் 5-ஆம் நிலைக்கு உயர்ந்தது. பொருளாதார வளர்ச்சியில் உலகில் முதல் இடத்தில் நிற்கிறது பாரதம். வெள்ளை அறிக்கை கூறுவதை பன்னாட்டு நிதி அமைப்புகள் ஆமோதிக்கின்றன. இதையும் மறுக்கவில்லை கருப்பு அறிக்கை.
“கொரோனாவால் இருண்டு போன உலகில், ஒளிமிக்க நட்சத்திரமாக திகழ்கிறது பாரதம்” என்று கடந்த 2022-ல் கூறிய IMF அமைப்பு [1], கடந்த 2023 (டிசம்பர்) உலக வளர்ச்சியில் “ஒளிமிக்க” பாரதத்தின் பங்கு 16% என்றும் கூறியது [2]. “பாரதத்தின் பெரும் வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தை இயக்குகிறது” என்று கடந்த 2023 (செப்டம்பர்) கூறியது பிரபல முதலீட்டு மதிப்பீட்டு அமைப்பு S&Ps (3). மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இதே அமைப்புகள் நம்மை பரிகாசம் செய்துவந்தன. பிரதமர் மோடி இன்று உலக அளவில் தலைசிறந்த தலைவராகத் திகழ, அவரது பொருளாதார சாதனை முக்கிய காரணம். இது எதையும் மறுக்கவில்லை கருப்பு அறிக்கை.
பாதாளத்திலிருந்து உச்சி
2014-ல் நமது பொருளாதாரம் இருந்த பின்னணியைப் பார்த்தால், மோடி ஆட்சியில் பாரதம் கண்ட வளர்ச்சி மகத்தானது மட்டுமல்ல, அதிசயமானதும் கூட. அளவு கடந்த செலவு, பட்ஜெட் துண்டு, விலைவாசி உயர்வு காரணமாக பொருளாதாரம் ஸ்தம்பித்தது. கழுத்துவரை பெரும் ஊழல்களில் சிக்கி, எந்த முடிவும் எடுக்க முடியாமல், பக்கவாதம் வந்த நிலையில் இருந்தது காங்கிரஸ் அரசாங்கம். திவாலா நிலையில் இருந்தன நமது பெரிய பெரிய கம்பெனிகள். கொடுத்த கடன்கள் வாராக்கடன்களாக மாற, பொருளாதார வளர்ச்சிக்குக் கடன் தர நிதியில்லாத நிலையில் திணறின வங்கிகள். அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், ஏராள வட்டியில் குறுகிய கால வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டன. இப்படி படுபாதாளத்தில் விழுந்து கிடந்தது நமது பொருளதாரம். இவற்றையெல்லாம் விலாவாரியாக விவரிக்கிறது வெள்ளை அறிக்கை. இவை எதற்கும் கருப்பு அறிக்கையில் மறுப்போ, பதிலோ இல்லை. ‘படு பாதாளத்தில் வீழ்ந்த நமது நாடு மீள, 10 ஆண்டுகள் பிடித்தது’ என்று கூறினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மீண்ட அது இன்று வளர்ச்சியின் உச்சியை எட்டியிருக்கிறது.
பேசும் புள்ளிவிவரங்கள்
வெள்ளை அறிக்கையில் புள்ளி விவரங்கள் பேசுகின்றன. வாஜ்பாய் ஆட்சியின் இறுதியில் 2003-04-ல், 2.1 சதவிகிதமாக இருந்த விலைவாசி உயர்வு, காங்கிரஸ் ஆட்சியில் கிடுகிடு வென்று உயர்ந்து 12.3% ஆகி, 2013-ல் 10% ஆக இருந்தது. 5 ஆண்டு (2009-14) காங்கிரஸ் ஆட்சியில் சராசரி விலைவாசி உயர்வு 10.4%. 10-ஆண்டு மோடி ஆட்சியில் சராசரி விலைவாசி உயர்வு 5.5%. எனவே காங்கிரஸ் ஆட்சியில் மோடி ஆட்சியைப் போல விலைவாசி இரண்டு மடங்கு உயர்ந்தது. அது மட்டுமல்ல, 1991 முதல் 2023 வரை 23 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போதெல்லாம் விலைவாசி உயர்வு அதிகமாகவும், பா.ஜ.க. ஆட்சி செய்தபோதெல்லாம் விலைவாசி குறைந்தும் இருந்தது. காரணம் என்ன என்பதை காங்கிரஸ் தான் ஆராய வேண்டும். 1991-96 காங்கிரஸ் ஆட்சியில், பொருளாதார நெருக்கடி இருந்த நிலையில், 1998-2004 பா.ஜ.க. ஆட்சியில் போக்ரன் அணுகுண்டு சோதனையால் உலகம் நம் மீது பொருளாதார, வர்த்தகத் தடைகளை விதிக்க, நம் பொருளாதாரம் தத்தளித்தது. 2004-2014 காங்கிரஸ் ஆட்சியில், 2008-ல் உலகப் பொருளாதார நெருக்கடி உருவானது. 2014-24-ல் மோடி ஆட்சியில் கொரோனா தொற்று, உக்ரைன் யுத்தம் போன்று உலகத்தையே இன்றும் ஆட்டிப் படைக்கும் நெருக்கடியை மோடி ஆட்சி சந்தித்தது.
அந்த நெருக்கடியைச் சந்தித்தும் மோடி ஆட்சி விலைவாசியைக் குறைத்து, வளர்ச்சியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகமாக்க, வேலையின்மை குறைந்தது. 2017-18-ல் வேலையின்மை 6.1% ஆக இருந்தது. அதை 2022-23-ல் ஏறக்குறைய பாதியாக, 3.2% ஆகக் குறைத்தது மோடி அரசு. 2009-ல் வங்கிகளின் மொத்த கடனில் 4.5% ஆக இருந்த வாராக்கடன்கள், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2014-ல் 10 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்து, வங்கிகளை நிலைகுலைய வைத்த வாராக் கடன்களைக் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சிதான். கூறியது யார்? ராஹுலுடன் பாரத் ஒற்றுமை யாத்திரை செய்த ரகுராம் ராஜன். ஏறக்குறைய திவாலா நிலையில் இருந்த வங்கித் துறையை, வங்கிகளில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு செய்து காப்பற்றியது மோடி அரசு. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 16% ஆக இருந்த நாட்டின் மொத்த முதலீட்டை, மோடி அரசு 28% சதவிகிதமாக உயர்த்தியது.
வங்கிகளில் முதலீடு, அனைவருக்கும் வங்கிக்கணக்கு, நோட்டுத் தடை, ஜி.எஸ்.டி., ஊழலுக்கு எதிராகப் போர் போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த மோடி அரசுக்கு 3-4 ஆண்டுகள் பிடித்தது. எல்லோருக்கும் வங்கி கணக்கினால் நோட்டுத் தடை சாத்தியமாக, அதனால் வரி ஏய்ப்பு குறைப்பு; அதனால் ஜி.எஸ்.டி. அமல்; பிறகு ஊழல் மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை; அதனால் ஏராள வருமானம்; அதனால் இதுவரை நாடு கண்டிராத வளர்ச்சித் திட்டங்கள். இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக நிலைப்படுத்தப்பட்ட வங்கிகள் என்ற பன்முக நடவடிக்கைகளால்தான் வளர்ச்சி, விலைவாசி, வேலையின்மை குறைப்பு எல்லாம் சாத்தியமானது. ஊடகங்கள் இந்த புள்ளி விவரங்களையும், அதற்கு மேலும் விவரங்களையும் வெளியிட்டன. அதற்கு கருப்பு அறிக்கையில் எந்த மறுப்பும் இல்லை.
“திருஷ்டி பொட்டு” - மோடி
மோடி அரசின் வெள்ளை அறிக்கை வருவதற்கு முன்பே, தனது கருப்பு அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ். ஆனால் வெள்ளை அறிக்கையின் நகல் இணையதளத்தில் கிடைத்தது போல, கருப்பு அறிக்கையின் நகல் கிடைக்கவில்லை. கருப்பு அறிக்கை என்ன கூறியிருக்கிறது என்பதை ஊடகங்கள் வெளியிட்டன. “10 ஆண்டுகளில் பொருளாதாரம் அழிந்து, வேலையின்மை அதிகமாகி, விவசாயம் அழிவுற்று, பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் பெருகி, சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது” என்று கருப்பு அறிக்கை கூறுவதாக காங்கிரஸின் ஆதரவு திஒயர் இணையதளம் (4) கூறுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? மோடி மீது காங்கிரஸ் என்னென்ன குற்றச்சாட்டுகள் சாட்டி வருகின்றனவோ, அவற்றையேதான் கருப்பு அறிக்கை கூறியிருக்கிறது. வழக்கம் போல ஆதாரம் ஏதும் இல்லாமல், மோடி மீது சேற்றை வாரி வீசும் இன்னொரு முயற்சிதான் கருப்பு அறிக்கை என்பது வெளிப்படை. எனவேதான் காங்கிரஸ் சமர்ப்பித்த கருப்பு அறிக்கை, தனது அரசுக்கு வைத்த “திருஷ்டி பொட்டு” தான் என்று கூறி கேலி செய்தார் மோடி.
ஊழல் 10-ஆண்டு Vs ஊழலற்ற 10-ஆண்டு
10-ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஊழல், சாரதா சிட் ஊழல், அண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஊழல், எம்ப்ரேயர் விமான ஊழல், ஹாக் விமான ஊழல், ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல், அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் உள்பட அரசுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய ஊழல்களை வெள்ளை அறிக்கை பட்டியலிட்டது. ஊழலற்ற 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியுடன் அதை ஒப்பிட்டு, நாணயத்தின் இரண்டு பக்கத்துக்கும் உள்ள மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசத்தை எடுத்துக் காட்டியிருக்கிறது வெள்ளை அறிக்கை. அது எதையும் கருப்பு அறிக்கை மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது. திஒயர் இணைய தள தகவல்களின்படி கருப்பு அறிக்கையில், பா.ஜ.க. மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கூறமுடியவில்லை என்று தெரிகிறது. ஒரு பக்கம் கழுத்தளவு ஊழலில் காங்கிரஸ், மறுபக்கம் பா.ஜ.க.வுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூட கூறமுடியாத காங்கிரஸின் நிலை. கருப்பு அறிக்கை கொண்டுவராமல் இருந்திருந்தாலே, காங்கிரஸுக்கு நல்லதோ என்று கூடத் தோன்றுகிறது.
இறுதியாக, இந்த வெள்ளை - கருப்பு அறிக்கைப் போட்டியில், பிரதமர் மோடி கூறியது போல, கருப்பு அறிக்கை காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு வாய்த்த திருஷ்டிப் பொட்டு என்றே மக்கள் நினைப்பார்கள்.
Note to the Reader: This article originally appeared in Thuglak Tamil Weekly Magazine www.gurumurthy.net. It has been reproduced in Asianet News Network.