
இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகள் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மே 26, 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து புதிய உத்தரவை பிறப்பித்தது.
பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது என்பதே அந்த உத்தரவாகும்.
மாடு விற்பனை தடைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தன. கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் இதை அமல்படுத்தமாட்டோம் என்று தெரிவித்தன. நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாடு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஐதராபாத்தை சேர்ந்த முகமது அப்துல் பாகீம் குரேஷி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் அசோக் பூஷன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு மீதான விசாரணை வருகிற 15-ந் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.