
2014ம் ஆண்டு தேர்தலின் போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று மோடி அளித்த வாக்குறுதி என்னாயிற்று என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது-
பொருளாாதார சரிவு
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை மோசமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த இரு நடவடிக்கைகளும் நாட்டை மிகப்பெரிய பொருளாதார சரிவுக்கு இழுத்துச் சென்றுள்ளன.
ரூபாய் நோட்டு தடை நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். சாமானிய மக்களின் துன்பங்களை பற்றி முழுமையாக கவலைப்படாத நடவடிக்கை.
15 கோடி பேர் பட்டினி
ரூபாய் நோட்டு தடைக்கு பின் கருப்புபணம், கள்ளநோட்டு, ஊழல் ஒழிக்கப்பட்டதா?. எந்தவிதமான இலக்கையும் அடையவில்லை. ரூ.500, ரூ.1000 நோட்டை தடை செய்ததன் மூலம் 15 கோடி அன்றாடம் காய்ச்சி தொழிலாளர்கள் வேலையிழந்து, பல நாட்களுக்கு பட்டினியோடு உறங்கினர். 40 சதவீத ஏ.டி.எம். எந்திரங்கள் மட்டுமே இயங்கின.
நன்றி
மத்திய அரசை வலுக்கட்டாயமாக ஜி.எஸ்.டி. வரியை பல பொருட்களுக்கு குறைக்க வைத்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். பா.ஜனதா அரசு இமாச்சலப் பிரதேச தேர்தலின் போது இப்படிச் செய்யவில்லை. அந்த கட்சியைப் பொருத்தவரை குஜராத் தேர்தலில் வெற்றிபெறுவதே முக்கியம்.
கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருந்தது. முதல் 5 ஆண்டுகளில் அதாவது, 2004 முதல் 2 அண்டுகளுக்கு 8.5 சதவீதமாகவும், அதன்பின் 2-வது முறை ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளில் 6.4 சதவீதமாக இருந்தது.
வாக்குறுதி என்னாயிற்று?
ஆனால் தேசிய ஜனநாயகக் கட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு தடையால் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது. 2014ம் ஆண்டு தேர்தலின் போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று மோடி அளித்த வாக்குறுதி என்னாயிற்று?
ஏன் சேர்க்கவில்லை?
2014ம் ஆண்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வரும்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருந்தாலும், அதன்பின் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஜி.எஸ்.டி. வரியில் பெட்ரோல், மின்சாரம், கட்டுமானத்துறையை ஏன் சேர்க்கவில்லை?.
தொழிற்சாலைகளுக்கு ‘இன்புட் கிரெடிட்’ கொடுக்க ஏன் மறுக்கிறார்கள்?. காங்கிரஸ் அரசு முன்மொழிந்த ஜி.எஸ்.டி. வரியை, இப்போதுள்ள அரசு ஒட்டுமொத்தமாக சிதைத்து, சிக்கலாக்கி வைத்துள்ளது.
பிரதமர் மோடி சாதாரணமாக நல்ல காலம் பிறந்துவிட்டது என்கிறார். ஆனால், எந்த வளர்ச்சி கொண்டுவரப்படவில்லை
இவ்வாறு அவர் பேசினார்.