இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை இத்தாலி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இத்தாலி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 13ஆம் தேதி (நாளை) முதல் 15ஆம் தேதி வரை இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி செல்லவுள்ளதாக தெரிகிறது.
பொருளாதாரத்தில் மேம்பட்ட ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் உள்ள போர்கோ எக்னாசியா என்ற சொகுசு ரிசார்ட்டில் நடைபெறவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஆகியவை ஜி7 உச்சிமாநாட்டில் அதிகம் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ரஷ்ய படையெடுப்பு குறித்து ஜி7 அமர்வில் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். மோடியின் இத்தாலி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 13ஆம் தேதி இத்தாலிக்குப் புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி, ஜூன் 14ஆம் தேதி பின் இரவில் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறைச் செயலர் வினய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இத்தாலி செல்லும் என தெரிகிறது.
ஜி7 மாநாட்டையொட்டி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பு உள்ளிட்ட பல இருதரப்பு பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி7 என்றால் என்ன?
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7 எனப்படுகிறது. அதாவது குரூப் ஆஃப் செவன் (G7 - Group of Seven) நாடுகள் ஜி7 நாடுகள் என அழைக்கப்படுகிறது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஆண்டு முழுவதும் அவ்வப்போது கூடி சில முக்கிய விஷயங்களை விவாதிப்பார்கள். அதேபோல், ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி7 உச்சி மாநாடு ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.
ஜி7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள். மற்ற உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.