சந்திரபாபு நாயுடு சிறையில் அதிகாலை 4 மணிக்கு உறங்கிய அவர் 7 மணிக்கு எழுந்துவிட்டார். உறக்கத்தில் இருந்து விழித்ததும் சிறிது நேரம் யோகா செய்தார்.
ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் 3 மணிநேரம் மட்டுமே தூங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அதிகாலை 4 மணிக்கு உறங்கிய அவர் 7 மணிக்கு எழுந்துவிட்டார். உறக்கத்தில் இருந்து விழித்ததும் சிறிது நேரம் யோகா செய்தார். பின், காலை உணவாக பழங்கள் சாப்பிட்டு, காபி மற்றும் வெந்நீர் பருகினார். மதியம் இரண்டு சப்பாத்தி, காய்கறி, தயிர், பழங்கள் ஆகியவற்றை உட்கொண்டார். பின, டீயும் வெந்நீரும் குடித்துவிட்டு செய்தித்தாள் வாசித்தார்" என்றும் தெரியவருகிறது.
சிறையில் சந்திரபாபு நாயுடுவுக்கு 7691 என்ற கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திரா பிரதேசத்தில் 2014 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். இவர் தனது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் ரூ.550 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை அந்த மாநில சி.ஐ.டி. புலனாய்வுப் பிரிவு விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து அவரிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின், ஞாயிறு காலையில் விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சந்திரபாபு நாயுடுவை செப்டம்பர் 23ஆம் தேதி வரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், சந்திரபாபு நாயுடு ஞாயிறு இரவு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.