காவிரியை விட மைசூர்பாகு ரொம்ப முக்கியம்.. காமெடி செய்யும் வாட்டாள் நாகராஜ்!!

By Asianet TamilFirst Published Sep 17, 2019, 4:18 PM IST
Highlights

மைசூர் பாகுவை தமிழகத்திற்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மைசூர் பாகு வழங்குவதை போன்ற புகைப்படத்தை ஆனந்த் ராஜ் என்பவர் பதிவிட்டு அதற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சமூக ஊடகங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது.

இதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. மைசூர் பாகிற்கான புவிசார் குறியீடை தமிழகத்திற்கு வழங்க கூடாது என்று கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருங்கிணைத்த கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், மைசூர் பாகை தமிழகத்திற்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைசூர்பாகை, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத வகையில் தடுப்போம். அதையும் மீறி கொண்டு சென்றால்  எல்லையில் தடுத்து மைசூர் பாகை நாங்களே சாப்பிட்டு விடுவோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சனைகளில் அமைதியாக இருந்தது போன்று மைசூர் பாகு விஷயத்தில் இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

காவிரி பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் கன்னட அமைப்புகளை திரட்டி கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர் வாட்டாள் நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!