
என்னுடைய அரசின் செயல்பாடுகளில் யாரேனும் தலையிட்டாலோ, விமர்சனம் செய்தாலோ அவர்களின் விரலை இழுத்து வைத்து நகத்தை வெட்டி விடுவேன் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேவ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் தேவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லை என்றால் மாடு வாங்கி வளர்க்கலாம் என்றும் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் பேசும்போது, தேவையில்லாத சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி ஊடகங்களின் செய்திகளுக்கு மசாலா சேர்க்காதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால் மோடியின் அறிவுரையை பாஜகவினர் கேட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால், திரிபுரா முதலமைச்சர் பிப்லாவ் தேவ்-ஐ நாளை பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாளை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், பிப்லாப் தேவ், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், காலை 8 மணிக்கு ஒரு காய்கறி கடைக்காரர் சுரைக்காய் வாங்கி வருகிறார். அந்த காய்களை வாங்க வந்தவர்கள், அந்த சுரைக்காயை அழுத்தி அழுத்தி பார்த்துவிட்டு வாங்காமல் சென்று விடுகின்றனர். இதனால் அந்த காய் 9 மணியளவில் அழுகி விடுகிறது. இதுபோல் எனது அரசில் நடக்கக் கூடாது. என் அரசியல் யார் தலையீடும் இருக்கக் கூடாது என்றார்.
மேலும் பேசிய அவர், என் அரசின் செயல்பாடுகளில் யாரேனும் தலையிட்டாலோ அல்லது விமர்சனம் செய்தாலோ அவர்களின் விரலை இழுத்து வைத்து நகத்தை வெட்டி விடுவேன். என் அரசை யாரும் தொட்டுப் பார்க்கக் கூட கூடாது என்று மிரட்டல் தொணியில் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.